"நான் ஆடுன காலத்துல... 'சேவாக்', 'தோனி', 'யுவராஜ்' எப்படியோ... அதே மாதிரி தான் இவரு இப்போ இந்தியா 'டீம்'க்கு..." புகழாரம் சூட்டிய 'கங்குலி'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்த டெஸ்ட் தொடரின் இறுதி போட்டியில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, இந்திய அணியின் தொடக்க விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. அப்போது கைகோர்த்த ரிஷப் பண்ட் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சிறப்பாக ஆடி, இந்திய அணியை மீட்டனர். அதிலும் குறிப்பாக, ரிஷப் பண்ட், இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தார்.
ரிஷப் பண்ட் சதமடித்து ஆட்டமிழந்த நிலையில், ஆண்டர்சன் வீசிய பந்தில், அவர் அடித்த ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டை, இந்த ஆண்டின் சிறந்த ஷாட் என கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளிட்ட நிபுணர்கள் பலர் பாராட்டி வருகின்றனர். பாகிஸ்தான் வீரர் இன்சமாம் உல் ஹக் கூட, சேவாக் இடது கையில் பேட்டிங் செய்வதை பார்ப்பது போல இருக்கிறது என பண்ட்டின் பேட்டிங்கை பாராட்டியிருந்தார். இந்நிலையில், பிசிசிஐ தலைவரும், இந்திய அணியின் முன்னாள் வீரருமான சவுரவ் கங்குலியும் ரிஷப் பண்ட்டின் பேட்டிங்கை பாராட்டிக் கருத்து தெரிவித்துள்ளார்.
'நான் ரிஷப் பண்ட் ஆட்டத்தை மிக அருகில் இருந்தே கண்டு களித்துள்ளேன். அவர் ஆட்டத்தின் போக்கையே மாற்றக் கூடிய திறமை படைத்தவர். எனக்கு மேட்ச் வின்னர்கள் மீது எப்போதும் நம்பிக்கை உண்டு. அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தால், நிச்சயம் தனியாளாக அவர்கள் போட்டியை வெற்றிப் பாதைக்கு எடுத்துக் கொண்டு செல்வார்கள்.
என்னுடைய காலக் கட்டத்தில், இது போன்ற திறமைகளுடன் சேவாக், யுவராஜ் சிங், தோனி ஆகியோர் இருந்தனர். அதே போல, இப்போதைய இந்திய அணிக்கு ரிஷப் பண்ட் கிடைத்துள்ளார். கடைசி டெஸ்ட் போட்டியில், ஏறக்குறைய கை விட்டு போன போட்டியை, தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் அவர் மீண்டும் இந்திய அணி பக்கம் திருப்பினார். ஆண்டர்சனின் பந்தை அவர் அடித்த விதம் சிறப்பாக இருந்தது' என ரிஷப் பண்ட பேட்டிங்கை கங்குலி பாராட்டி பேசியுள்ளார்.
மற்ற செய்திகள்