அந்த பையனை ஏலத்துல எடுக்கவே RCB ரூ.20 கோடி ஒதுக்கி வச்சிருக்காம்.. கொளுத்திப்போட்ட ஆகாஷ் சோப்ரா..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபெங்களூரு அணி இளம் வீரரை ஏலத்தில் எடுக்க 20 கோடியை ஒதுக்கியுள்ளதாக ஆகாஷ் சோப்ரா பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் ஏலம்
ஐபிஎல் 15-வது சீசனுக்கான பணிகளில் பிசிசிஐ மும்முறமாக ஈடுபட்டு வருகிறது. இந்த ஆண்டு லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய இரு அணிகள் இணைய உள்ளன. அதனால் அனைத்து அணியில் உள்ள வீரர்களுகும் கலைக்கப்பட்டு மெகா ஐபிஎல் ஏலம் நடைபெற உள்ளது. இந்த மெகா ஏலம் வரும் பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் பெங்களூரில் நடைபெறவுள்ளது.
வீரர்கள் பட்டியல் வெளியீடு
ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கேற்க மொத்தம் 1214 வீரர்கள் பதிவு செய்திருந்த நிலையில், அவர்களில் 590 பேர் மட்டுமே தகுதியானவர்கள் என ஐபிஎல் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதில் 228 பேர் சர்வதேச கிரிக்கெட் வீரர்களும், 355 பேர் உள்ளூர் போட்டிகளில் மட்டும் பங்கேற்ற வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். இதில் மொத்தம் 370 இந்திய வீரர்களும், 220 வெளிநாட்டு வீரர்களும் உள்ளனர்.
ஆர்சிபி கேப்டன்
அதேவேளையில் விராட் கோலி கடந்த ஐபிஎல் தொடரும் தனது கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். அதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அடுத்த கேப்டனாக யாரை நியமிக்க உள்ளது என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஆகாஷ் சோப்ரா கருத்து
இந்த நிலையில் இந்திய அணி முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘ஷ்ரேயஸ் ஐயரை ஆர்சிபி அணிதான் ஏலத்தில் எடுக்கும் என எதிர்பார்க்கிறேன். அதற்கு காரணம் அவரை கேப்டனாக நியமிக்க ஆர்சிபி அணி முயன்று வருவதாக தெரிகிறது. ஸ்ரேயாஸ் ஐயரை ஏலத்தில் எடுப்பதற்காகவே ஆர்சிபி அணி ரூ.20 கோடியை ஒதுக்கி வைத்துள்ளதாக ஒருவர் என்னிடம் கூறினார்.
அதிக விலைக்கு ஏலம் போகும் வீரர்
அப்படி ஆர்சிபி அணி தவறவிட்டால், கொல்கத்தா அணிதான் வாங்கும். பஞ்சாப் அணி இவரை டார்கெட் செய்யவில்லை என தகவல் கிடைத்துள்ளது. அதுமட்டுமில்லை மெகா ஏலத்தில் ஷ்ரேயஸ் ஐயர்தான் அதிக தொகைக்கு ஏலம் போகும் இந்திய வீரராக இருப்பார்’ என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
வெளிநாட்டு வீரர்கள்
தொடர்ந்து பேசிய அவர், ‘வெளிநாட்டு வீரர்கள் பட்டியலில் ரபாடா, குவின்டன் டி காக், டேவிட் வார்னர் ஆகியோரில் ஒருவர் மிகப்பெரிய தொகைக்கு ஏலம் போவார்கள் என நினைக்கிறேன்’ என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்