"உங்கள வெச்சுக்கிட்டு 'ஸ்கூல்' பசங்க ஆடுற 'கிரிக்கெட்' தான் ஆட முடியும்... வேற என்னத்த பண்றது??..." 'பாகிஸ்தான்' அணியை வறுத்தெடுத்த முன்னாள் 'வீரர்'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே தற்போது டெஸ்ட் போட்டி தொடர் நடைபெற்று வரும் நிலையில், முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றிருந்தது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டுகள் இழப்புக்கு 8 ரன்கள் எடுத்து 354 ரன்கள் பின்தங்கியுள்ளது. முன்னதாக, முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 297 ரன்கள் எடுத்திருந்தது. நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 659 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்திருந்தது.
நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் 238 ரன்களும், ஹென்ரி நிகோலஸ் 157 ரன்களும் குவித்திருந்தனர். இதனையடுத்து, பாகிஸ்தான் அணி மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், அவர்களின் ஆட்டத்தை பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
'பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளிப்படுத்தும் கொள்கையைப் போலத் தான் பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட்டையும் பார்க்க முடியும். அந்த அணியில் சராசரி வீரர்கள் தான் இருக்கிறார்கள். சராசரி வீரர்களை வைத்துக் கொண்டு பள்ளிக்கூடங்களில் விளையாடும் கிரிக்கெட்டை தான் விளையாட முடியும்.
பாகிஸ்தான் அணி எப்போதெல்லாம் டெஸ்ட் போட்டி விளையாடுகிறதோ, அப்போதெல்லாம் அதன் சாயம் வெளுத்து விடுகிறது. பள்ளிகளில் விளையாடும் கிரிக்கெட்டை பாகிஸ்தான் வீரர்கள் விளையாடுகிறார்கள். அதே போன்ற வீரர்களைத் தான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் அணியில் வைத்துள்ளது. மீண்டும் கிரிக்கெட் மேலாண்மையை மாற்றுவது குறித்து சிந்திப்பார்கள். ஆனால் எப்போது மாற்றப் போகிறார்கள் என தெரியவில்லை' என பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்தையும், அதன் அணி வீரர்களையும் ஒரே போடாக போட்டு சோயப் அக்தர் தாக்கிப் பேசியுள்ளார்.
மற்ற செய்திகள்