"டு பிளெஸ்ஸிஸ் கேப்டன்சி'ல ஒரு ஸ்பெஷலும் இல்ல.." ஓப்பனாக பேசிய முன்னாள் வீரர்.. ஏன் அப்படி சொன்னாரு?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரில், கடந்த சீசன் வரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வழிநடத்தி வந்தவர் விராட் கோலி.
இதனையடுத்து, கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அவர் அறிவிக்கவே, இந்த முறை நடைபெற்ற ஏலத்தில், தென்னாப்பிரிக்க வீரர் பாப் டு பிளெஸ்ஸிஸ்ஸை எடுத்த பெங்களுர் அணி, அவரை புதிய கேப்டனாக நியமித்திருந்தது.
இன்னொரு பக்கம், ஆர்சிபி அணியில் ஒரு வீரராக விராட் கோலி தற்போது களமிறங்கி வருகிறார்.
ஆர்சிபி - ராஜஸ்தான் மோதல்
தற்போது நடைபெற்று வரும் 15 ஆவது ஐபிஎல் தொடரில், இதுவரை இரண்டு போட்டிகளில் ஆடியுள்ள பெங்களூர் அணி, ஒரு போட்டியில் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் கண்டுள்ளது. இதனையடுத்து, இன்று (05.04.2022) ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி களமிறங்கவுள்ளது.
புதிய கேப்டன்
பல தொடர்களில், பலம் வாய்ந்த அணியாக ஆர்சிபி திகழ்ந்தாலும் இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றியது கிடையாது. இதனிடையே, புதிய கேப்டனாக டு பிளெஸ்ஸிஸ் பொறுப்பு எடுத்துள்ளது, நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்தும் என ரசிகர்கள் கருதி வருகின்றனர். இதற்கு காரணம், டு பிளெஸ்ஸிஸ் ஏற்கனவே தென்னாப்பிரிக்காவை வழிநடத்தி உள்ளது தான்.
நம்பிக்கையில் ரசிகர்கள்
அது மட்டுமில்லாமல், ஐபிஎல் தொடரின் சிறந்த அணிகளில் ஒன்றான சென்னை அணியில், தோனியின் தலைமையில் கீழ் அதிக போட்டிகள் ஆடிய அனுபவம் டு பிளெஸ்ஸிஸ்ஸிற்கு உள்ளது. இதனால், பெங்களூர் அணியின் ரசிகர்கள், இந்த முறை நிச்சயம் தங்களின் ஃபேவரைட் அணி கோப்பையைக் கைப்பற்றி அசத்தும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.
ஸ்பெஷலாக ஒண்ணுமில்லை
இந்நிலையில், டு பிளெஸ்ஸிஸ் கேப்டன்சி தன்னை பெரிய அளவில் ஈர்க்கவில்லை என முன்னாள் வீரர் கருத்து தெரிவித்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சோயிப் அக்தர், டு பிளெஸ்ஸிஸ் கேப்டன்சி பற்றி பேசுகையில், "விராட் கோலி கேப்டன்சி பதவியில் இருந்து விலகியதும், அந்த இடத்தில் டு பிளெஸ்ஸிஸ் வந்து விட்டார். நான், அவரின் பெரிய ரசிகன் ஒன்றும் கிடையாது. ஏனென்றால், அவரது கேப்டன்சியில் அப்படி ஸ்பெஷலாக ஒன்றும் நான் பார்க்கவே இல்லை.
இந்தியா மற்றும் ஆர்சிபி அணிக்கு, ஒரு துரதிர்ஷ்டவசமான கேப்டனாக கோலி இருந்து வந்தார். அவர் தன்னால் முடிந்த வரையிலான முயற்சிகளை செய்துள்ளார். ஆனால், அது அவருக்கு கைகொடுக்கவில்லை. இதன் பிறகு, டு பிளெஸ்ஸிடம் சில வேலைகளில் சிறந்த தலைமை பண்பு ஒன்றும் வெளிப்படுவதில்லை. ஒரு பெரிய அணியை வழிநடத்தும் பொறுப்பு அவருக்கு கிடைத்துள்ளது. இதனால், டு பிளெஸ்ஸிஸ் மூலம் அவர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்குமா என்பதை பார்க்கலாம்.
சென்னை அணிக்காக நீண்ட காலம், அவர் ஆடியுள்ளார். இதனால், அவரிடம் நிறைய யோசனைகள் இருக்கும். இருப்பினும், இங்கிருந்து எவ்வளவு தூரம் டு பிளெஸ்ஸிஸ் செல்வார் என்பது எனக்கு தெரியவில்லை. அவர் மட்டும் அதை செய்தால், அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்" என சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்