"அந்த ஒரு 'தப்ப' மட்டும் செஞ்சுடாதீங்க.." 'இந்திய' அணி எடுக்கப் போகும் 'முடிவு'?.. டென்ஷன் ஆன 'ஆகாஷ் சோப்ரா'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றி அசத்தியிருந்த நிலையில், அடுத்ததாக தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளை அங்கு ஆடவுள்ளது.
இதில், டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட நிலையில், முதல் டெஸ்ட் போட்டி, வரும் 26 ஆம் தேதி ஆரம்பமாகவுள்ளது. இதனையடுத்து, ஒரு நாள் தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், ருத்துராஜ், வெங்கடேஷ் உள்ளிட்ட இளம் வீரர்கள் விஜய் ஹசாரே தொடரில் மிகச் சிறப்பாக ஆடி ரன் குவித்தனர். இதனால், எந்தெந்த வீரர்கள் அணியில் இடம்பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.
அது மட்டுமில்லாமல், பல முன்னாள் வீரர்களும் எந்தெந்த வீரர்கள் நிச்சயம் இந்திய அணியில் இடம்பெற வேண்டும் என்பது பற்றியும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா (Aakash Chopra), தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ஷிகர் தவான்(Shikhar Dhawan) நிச்சயம் இடம்பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
'விஜய் ஹசாரே டிராபி தொடரில், ஷிகர் தவான் பெரிய அளவில் ரன்கள் குவிக்கவில்லை தான். ஆனால், அதற்காக அவரை ஒரு நாள் அணியில் இருந்து புறக்கணித்தால், அது சரியாக இருக்காது. அவர் ஒரு நாள் போட்டிகளில் மிகச் சிறப்பாக ஆடியுள்ளார். 2023 ஆம் ஆண்டு ஒரு நாள் போட்டி உலக கோப்பைக்கே அவரை அணியில் இடம்பெறச் செய்வது பற்றித் திட்டமிடலாம் என இருக்கும் பட்சத்தில், இப்போது அவரை எப்படி புறக்கணிக்க முடியும்?.
2021 ஆம் ஆண்டு இந்திய அணி அதிகளவில் ஒரு நாள் போட்டிகளில் ஆடவில்லை. ருதுராஜ் மற்றும் வெங்கடேஷ் ஆகிய இளம் வீரர்கள் சிறப்பாக ரன் குவிக்கிறார்கள் என்றோ, ராகுல் - ரோஹித் பேட்டிங் இணை நன்றாக அமைந்து விட்டது என்பதற்காக வேண்டியோ, தவானை ஒதுக்கக் கூடாது.
அவர் சிறப்பாக ஆடவில்லை என்றால், அவரை வெளியே உட்கார வையுங்கள். அடுத்த வீரர்கள் சிறப்பாக ஆடுவதற்காக அவரைத் தேர்வு செய்யாமல் போவது, மிகவும் நியாயமற்ற செயலாக இருக்கும். முதல் தர போட்டிகளின் அடிப்படையில் அவரது ஆட்டத்திறனைக் கணக்கிடாமல், தென்னாப்பிரிக்க ஒரு நாள் தொடருக்கு தவானை நிச்சயம் தேர்வு செய்ய வேண்டும்.
அதே போல, இந்திய அணி ஒரு கட்டத்தில், அணிக்குள் மாற்றத்தை எதிர்நோக்கினால், அது பற்றி தவானிடம் நீங்கள் பேச வேண்டும். ஒரு சீனியர் வீரரை அதிகம் நீங்கள் தேர்வு செய்யாமல் போகும் போது, அதனைப் பற்றி அவரிடமே விவரிப்பது, அவருக்கு சற்று நம்பிக்கையை ஏற்படுத்தும்' என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
இந்தாண்டு நடைபெற்ற டி 20 உலக கோப்பை போட்டியில், ஷிகர் தவான் இந்திய அணியில் இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்