"CSK, MI அப்படி பண்ணி இருக்கவே கூடாது.. இதுனால தான் மோசமா ஆடுறாங்க.." கிழித்து தொங்க விட்ட முன்னாள் சென்னை வீரர்..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடர்களில் பலம் வாய்ந்த அணிகள் எது என கேட்டால், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளின் பெயரை தான் பலரும் கூறுவார்கள்.
மும்பை அணி ஐந்து முறையும், சென்னை அணி நான்கு முறையும் ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றி, அசைக்க முடியாத அணியாக ஐபிஎல் போட்டிகளில் திகழ்ந்து வருகிறது.
ஆனால், யார் கண் பட்டதோ தெரியவில்லை. நடப்பு ஐபிஎல் சீசனில் இரண்டு அணிகளும் கடைசி இரண்டு இடங்களை பிடித்துள்ளது.
மும்பை அணியின் பலவீனம்
இதுவரை ஐந்து போட்டிகள் ஆடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஒரே ஒரு போட்டியில் வெற்றி பெற்று, 9 ஆவது இடத்தில் உள்ளது. இன்னொரு பக்கம், இதுவரை ஆடியுள்ள ஐந்து போட்டிகளில் தோல்வி அடைந்துள்ள மும்பை அணி, புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில உள்ளது. தற்போதைய ஐபிஎல் தொடரில், ஒரு வெற்றி கூட பெறாத அணி என்றால் அது மும்பை மட்டும் தான்.
இதற்கு முன்பும், ஆரம்பத்தில் நான்கு முதல் ஐந்து போட்டிகளில் மும்பை அணி தோல்வி அடைந்து, பின் அடுத்த சுற்றுக்கு முன்னேறி அசத்திய ஐபிஎல் சீசன்களும் உண்டு. ஆனால், இந்த முறை அப்படி நடப்பதற்கு வாய்ப்பில்லை என்றே பலரும் குறிப்பிட்டு வருகின்றனர். இதற்கு காரணம், அந்த அணியிலுள்ள பந்து வீச்சு வரிசை தான்.
இந்நிலையில், முன்னாள் சிஎஸ்கே வீரரான ஷேன் வாட்சன், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளிலுள்ள பிரச்னை என்ன என்பதை விளக்கி கருத்து வெளியிட்டுள்ளார். "மும்பை அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருப்பது, என்னை பெரிதாக அதிர்ச்சி ஆக்கவில்லை. ஏனென்றால், ஏலத்தில் அவர்கள் எடுத்த முடிவு, சிறந்ததாகவே அமையவில்லை. இஷான் கிஷானுக்கு அதிக பணத்தை செலவு செய்தனர். அவர் திறமையான வீரர் தான். ஆனால், அவ்வளவு பெரிய தொகை அவருக்கு தேவையே இல்லை.
அதே போல, இந்த முறை வராமல் போன ஜோஃப்ரா ஆர்ச்சரை 8.5 கோடி ரூபாய்க்கு மும்பை அணி ஏலத்தில் எடுத்தது. கடந்த சில மாதங்களாகவே அவர் கிரிக்கெட்டும் ஆடவில்லை. இப்படி அணியில் பல ஓட்டைகள் உள்ளது" என மும்பை அணி பற்றி குறிப்பிட்டார்.
சிஎஸ்கே பிரச்சனையே இது தான்..
தொடர்ந்து சென்னை பற்றி பேசிய வாட்சன், "சென்னை அணி இதுவரை ஆடியுள்ள ஐந்து போட்டிகளை வைத்து பார்க்கும் போது, அவர்களின் வேகப்பந்து வீச்சு தான் பலவீனமாக உள்ளது. முந்தைய சீசன்களில் ஷர்துல் தாக்கூர் இருந்தார். அவர்கள் அதிக தொகை கொடுத்து வாங்கிய தீபக் சாஹரும் காயம் காரணமாக இந்த முறை ஆடாமல் போனது, அவர்களுக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
அதே போல, ஹேசல்வுட் போன்ற சிறந்த வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர்களும் சென்னை அணியில் இல்லை. அவர்கள் அணியில் உலகத்தரம் வாய்ந்த வெளிநாட்டு பந்து வீச்சாளர் ஒருவர் நிச்சயம் இருப்பார். ஆனால் இந்த முறை அது இல்லாதது தான் அவர்கள் அதிகம் போராட காரணம்" என வாட்சன் குறிப்பிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்