"ச்சே, என்னங்க இப்படி எல்லாமா பண்ணுவீங்க??.." 'போட்டி'க்கு நடுவே ஸ்டம்பை கொத்தாக பிடுங்கி எறிந்த 'சீனியர்' வீரர்.. அதிர்ச்சியை ஏற்படுத்திய 'வீடியோ'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

வங்கதேச கிரிக்கெட் அணி, சமீப காலமாக சிறப்பாக செயல்பட்டு வந்த போதிலும், அந்த அணியைச் சேர்ந்த வீரர்கள் சிலர், போட்டிக்கு நடுவே செய்யும் சில ஒழுங்கீன செயல்பாடுகள், அவ்வப்போது வைரலாகி பரபரப்பை உண்டு பண்ணும்.

"ச்சே, என்னங்க இப்படி எல்லாமா பண்ணுவீங்க??.." 'போட்டி'க்கு நடுவே ஸ்டம்பை கொத்தாக பிடுங்கி எறிந்த 'சீனியர்' வீரர்.. அதிர்ச்சியை ஏற்படுத்திய 'வீடியோ'!!

சமீபத்தில், இலங்கை அணிக்கு எதிரான தொடரின் போது, வங்கதேச விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹீம், இலங்கை வீரரை தள்ளி விடும் படி, சக வீரரிடம் அறிவுறுத்தியது, கடும் விமர்சனத்தை சந்தித்திருந்தது. அதே போல, தமிம் இக்பாலும் நடுவரை திட்டி, அதே தொடரில் சர்ச்சையை உண்டு பண்ணியிருந்தார்.

இந்நிலையில், அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது மீண்டும் அரங்கேறியுள்ளது. வங்கதேசத்தில், தற்போது டாக்கா பிரிமியர் லீக் (Dhaka Premier League) நடைபெற்று வருகிறது. இதில், மொஹம்மதென் ஸ்போர்ட்டிங் கிளப் மற்றும் அபஹானி லிமிடெட் அணிகள் மோதின. இதில் அபஹானி லிமிடெட் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த சமயத்தில், மொஹம்மதென் கேப்டன் ஷகிப் அல் ஹசன் (Shakib Al Hasan), முஷ்பிகுர் ரஹீமுக்கு பந்து வீசினார். அப்போது, ரஹீமுக்கு எல்.பி.டபுள்யூ அப்பீல் செய்தார்.

இதற்கு போட்டி நடுவர் அவுட் கொடுக்க மறுத்த நிலையில், மைதானத்திலேயே நிதானத்தை இழந்த ஷகிப் அல் ஹசன், ஸ்டம்ப் மீது ஓங்கி உதைத்துள்ளார். அத்துடன் நிற்காத ஷகிப், நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபடவும் செய்தார். அதன் பிறகு, போட்டிக்கு நடுவே மழை பெய்த நிலையில், ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. அப்போது, ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த ஷகிப், ஓடி வந்து மூன்று ஸ்டம்ப்களையும் பிடுங்கி, தரையில் வேகமாக தூக்கி எறிந்தார்.

 

அது மட்டுமில்லாமல், இந்த இடைவெளி நேரத்தில், அபஹானி அணியின் பயிற்சியாளர் காலித் மஹ்மூத்துடனும், ஷகிப் அல் ஹாசன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து, ஷகிப் அல் ஹசன் செய்த அநாகரீக செயல், கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தி, அவர் மீது விமர்சனத்தையும் அதிகம் ஏற்படுத்தியது.

 

இந்நிலையில், தனது செயலுக்கு பேஸ்புக் பக்கத்தில், மன்னிப்பு கேட்டு பதிவு ஒன்றைத் தெரிவித்துள்ளார். அதில், 'எனது கோபத்தை வெளிப்படுத்தியதற்கு அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அதிலும் குறிப்பாக, வீட்டிலிருந்து தொலைக்காட்சி மூலம் இந்த போட்டியை பார்த்தவர்களுக்கு. என்னைப் போன்ற ஒரு அனுபவமிக்க வீரர், இப்படி நடந்திருக்கக் கூடாது.

ஆனால், சில நேரத்தில் துரதிர்ஷ்டவசமாக இப்படி நடந்து விடுகிறது. எனது செயலுக்கு அணி நிர்வாகம், போட்டி நிர்வாகிகள் மற்றும் ஏற்பாட்டுக் குழு என அனைவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எதிர்காலத்தில், நான் இதனை மீண்டும் செய்ய மாட்டேன் என நம்புகிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்