கர்மா ட்வீட் போட்டு வைரலான முகமது ஷமி.. "நாமளே இப்டி பண்ணலாமா?".. கேள்வி கேட்டு அஃப்ரிடி சொன்ன கருத்து!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலியாவில் வைத்து நடைபெற்று வந்த 8 வது டி உலக கோப்பை தொடர் சமீபத்தில் முடிவடைந்திருந்தது.
அரை இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணியும், இந்தியாவை அரையிறுதியில் வீழ்த்தி இங்கிலாந்து அணியும் இறுதி போட்டிக்கு முன்னேற்றம் கண்டிருந்தது.
இறுதியில், பாகிஸ்தான் அணியை ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்த இங்கிலாந்து அணி, இரண்டாவது முறையாக டி 20 உலக கோப்பையை கைப்பற்றி அசத்தி உள்ளது.
முன்னதாக, ஐம்பது ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டின் நடப்பு சாம்பியன் ஆகவும் இங்கிலாந்து அணி தான் உள்ளது. தொடர்ந்து, டி 20 உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அணிக்கு பல கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தொடர்ந்து பாராட்டுக்களையும் தெரிவித்து வந்தனர்.
இதனிடையே, பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்ததை அடுத்து அந்த அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர், தனது டிவிட்டர் பக்கத்தில் "💔" என்ற எமோஜியை பதிவிட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, "மன்னிக்க சகோதரரே.. இதற்கு பெயர் தான் கர்மா" என பதில் ட்வீட் செய்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, ஷமியின் கமெண்ட்டிற்கு ரிப்ளை அளித்திருந்தார் அக்தர். முன்னதாக வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை பாராட்டியிருந்தார். அந்த புகைப்படத்தை பகிர்ந்த அக்தர்,"இதை விவேகமான ட்வீட் என்று அழைக்கலாம்" என கமெண்ட் செய்திருந்தார்.
இப்படி இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர் இடையே ட்வீட் மூலம் சொல்லப்பட்ட பதில்கள், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாக மாறி இருந்தது. அப்படி ஒரு சூழலில், முகமது ஷமியின் கருத்திற்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான ஷாஹித் அஃப்ரிடி சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
"நாம் கிரிக்கெட் வீரர்கள். நாம் ரோல் மாடலாகவும், அம்பாசிடர்களாகவும் இருக்க வேண்டும். எனவே இது மாதிரியான விஷயங்களை எல்லாம் முடிவு கட்ட வேண்டும். நாம் பக்கத்து நாட்டுக்காரர்கள். நாம் வெறுப்புணர்வை பரப்பக் கூடாது. இது போன்ற விஷயத்தை நாமே செய்ய தொடங்கினால் பொது மக்களிடம் இருந்து நாம் என்ன எதிர்பார்க்க முடியும்?".
விளையாட்டின் மூலம் தான் நமது உறவு மேம்படும். பாகிஸ்தான் அணி அவர்களுடன் (இந்திய அணியினர்) விளையாடுவதை பார்க்க வேண்டும், அவர்களும் பாகிஸ்தானில் விளையாடுவதை பார்க்க வேண்டும்" என குறிப்பிட்ட அஃப்ரிடி, "நீங்கள் ஓய்வு பெற்றால் கூட இது போன்ற விஷயத்தை செய்யக் கூடாது. ஆனால், தற்போதைய அணியில் இருப்பதால் இது போன்ற விஷயங்களை தவிர்க்க வேண்டும்" என கூறி உள்ளார்.
மற்ற செய்திகள்