“நீங்கலாம் இன்னும் நல்லா வரலாம்..! ஆனா ‘இத’ மட்டும் விட்ருங்க..!”- ஷாகித் அஃப்ரிதி யாருக்குச் சொல்றார்ன்னு தெரியுதா?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணி வருகிற நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டித் தொடர் முதல் புதிய அத்தியாத்தைத் தொடங்குகிறது என்றே கூறலாம். புதிய கேப்டன், புதிய பயிற்சியாளர் என அணியில் மாறுதல்கள் ஏற்பட்டுள்ள நிலையில் இந்தியாவின் முன்னணி வீரர் ஒருவருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஷாகித் அஃப்ரிதி ஒரு ஆலோசனையை வழங்கி உள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஆன விராட் கோலிக்கு ஷாகித் அஃப்ரிதி மிகப்பெரிய ஆலோசனையை வழங்குவதாகத் தெரிவித்துள்ளார். டி20 போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்து விலகி உள்ள ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் தொடர்ந்து நீடிக்கிறார். ஆனால், இந்த நிலை வேண்டாம் என ஷாகித் அஃப்ரிதி கோலிக்கு ஆலோசனை வழங்குவது போல் பேசியுள்ளார்.
அஃப்ரிதி கூறுகையில், “இந்திய கிரிக்கெட் அணிக்கு விராட் கோலி ஒரு மிகப்பெரிய பலம். ஆனால், அவர் டி20 மட்டுமல்லாது ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்து விலகினால்தான் நல்லது. என்னைப் பொறுத்த வரையில் விராட் அனைத்து விதமான போட்டிகளின் கேப்டன் பதவிகளில் இருந்தும் விலக வேண்டும். இதன் பின்னரான கிரிக்கெட் வாக்கையை மகிழ்ச்சியுடன் கோலி விளையாட வேண்டும்.
காரணம், ஒரு கிரிக்கெட் வீரர் ஆக அவர் இன்னும் பல காலம் விளையாட முடியும். கிரிக்கெட்டில் கோலி ஒரு டாப் பேட்ஸ்மேன். அவருக்கு மனதில் எந்தவித அழுத்தமும் இல்லாமல் இருந்தால் அவர் இன்னும் சிறப்பாக விளையாடலாம். தன்னுடைய ஆட்டத்தை அவர் விரும்பி விளையாடுவார்” என்றுள்ளார்.
மேலும், இந்திய டி20 அணியின் புதிய கேப்டன் ரோகித் சர்மா குறித்து ஷாகித் அஃப்ரிதி கூறுகையில், “ரோகித் சர்மாவைப் பொறுத்த வரையில் இது எதிர்பார்த்ததுதான். அவருடன் நான் ஒரு ஆண்டு முழுவதும் இணைந்து டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடி உள்ளேன். அவர் மிகவும் அபாரமான விளையாட்டு வீரர். எங்கு அமைதியாக இருக்க வேண்டுமோ அங்கு அமைதியாக இருப்பார். கோபத்தை வெளிக்காட்டும் இடத்தில் கண்டிப்பாகக் கோபப்படுவார். நமக்கு இரண்டுமே வேண்டும். நான் சொன்னபடி கேப்டன் மாற்றம் என்பது ஒரு கட்டத்தில் நடக்க வேண்டியதுதான். அவருக்கு நிச்சயம் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்” என்றார்.
மற்ற செய்திகள்