"உங்களுக்கு 'பேட்டிங்' தானே பிரச்சன??.." அப்போ அந்த 'பையன' உள்ள கொண்டு வாங்கய்யா.. அப்புறம் பாருங்க.." 'RCB'க்கு சிறப்பான ஐடியா குடுத்த 'சேவாக்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணி, இந்த சீசனின் முதல் 4 போட்டிகளில் அபாரமாக வெற்றி பெற்று அசத்தியது.
தொடர்ந்து, ஐந்தாவது போட்டியில், சென்னை அணியுடன் தோல்வி அடைந்த பெங்களூர் அணி, டெல்லி அணிக்கு எதிராக அடுத்து நடைபெற்ற போட்டியில், வெற்றி பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து, பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில், பெங்களூர் அணி மீண்டும் தோல்வியைத் தழுவியது.
இதுவரை ஒருமுறை கூட கோப்பையைக் கைப்பற்றாத பெங்களூர் அணி, இந்த சீசனில், கோப்பையை கைப்பற்றும் அணிகளில் ஒன்றாக கருதப்பட்டு வருகிறது. ஆனால், இந்த சீசனில் பெங்களூர் அணி பெற்ற இரண்டு தோல்விகளும், பேட்டிங்கில் சொதப்பியதால் தான் நிகழ்ந்தது. டிவில்லியர்ஸ், மேக்ஸ்வெல் போன்ற வீரர்கள் இருந்தும், இவர்களின் விக்கெட்டுகள் வீழ்ந்ததும், பெங்களூர் அணி மோசமாக ஆடியிருந்தது.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான சேவாக் (Sehwag), ஆர்சிபி அணியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். 'விராட் கோலி, தொடக்க வீரராக களமிறக்குவதை விட்டு விட்டு, பேட்டிங் வரிசையில் மீண்டும் அவர் மூன்றாம் இடத்திலேயே ஆட வேண்டும். ராஜத் படிதாரை நீக்கிவிட்டு, இளம் வீரர் முகமது அசாருதீனுக்கு, பெங்களூர் அணி வாய்ப்பு வழங்க வேண்டும்.
பெங்களூர் அணியின் மிடில் ஆர்டரில், மூன்று உலகத் தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் இடம்பெற்றுள்ளனர். இதனால், தேவ்தத் படிக்கல் மற்றும் முகமது அசாருதீன் தொடக்க வீரராக களமிறங்கும் பட்சத்தில், அதன் பிறகு, கோலி, மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ் ஆகியோர், மிடில் ஆர்டரில் பிரஷரை சரி செய்து நேர்த்தியாக ஆடி ரன் குவிப்பார்கள்' என சேவாக், பெங்களூர் அணிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
பெங்களூர் அணியில் தற்போது ஆடி வரும் ராஜத் படிதார், இதுவரை 4 போட்டிகளில் களமிறங்கி, 71 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். ஆனால், இதுவரை ஆடுவதற்காக வாய்ப்பு பெறாத இளம் வீரர் முகமது அசாருதீன் (Mohammed Azharuddeen), கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற சையது முஷ்டாக் அலி தொடரில், 37 பந்துகளில் சதமடித்து, அனைவரையும் ஆச்சரியப்படுத்தியிருந்தார்.
ஐபிஎல் ஏலத்தில், அசாருதீனை பெங்களூர் அணி, அவரது அடிப்படை தொகையான 20 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்