இன்னைக்கு இந்தியா டீம் அதிரடியாக விளையாடுதுனா.. அதுக்கு ‘விதை’ அந்த மனுஷன் போட்டது.. பாகிஸ்தான் முன்னாள் வீரர் புகழாரம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் குறித்து பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சாக்குலைன் முஷ்டாக் புகழ்ந்து பேசியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள பல வீரர்கள் தற்போது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால் கிரிக்கெட் உலகில் பலம் வாய்ந்த அணியாக இந்தியா உருவெடுத்துள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் விளையாடும் அளவுக்கு தற்போதுள்ள இந்திய அணி உள்ளது. இது சர்வதேச கிரிக்கெட் அணிகள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது இந்திய வீரர்கள் பயமில்லாமல் விளையாடுவதற்கு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக்தான் காரணம் என பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சாக்குலைன் முஷ்டாக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கூறிய அவர், ‘சேவாக் தன்னுடைய அதிரடி ஆட்டத்தினால் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஏற்படுத்திய தாக்கத்தை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். தற்போதுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் அவரின் அதிரடி ஆட்டத்தினால் பயனடைந்துள்ளனர்.
சேவாக்கின் அதிரடியான பேட்டிங்தான், இந்திய கிரிக்கெட்டின் மனநிலையையும், அந்நாட்டு கிரிக்கெட் வீரர்களின் மனநிலையையும் மாற்றியது. கிரிக்கெட் ஜாம்பவான் சர் விவியன் ரிச்சர்ட்ஸின் அணுகுமுறையும், சேவாக்கின் அணுகுமுறையும் ஒரே மாதிரி இருக்கும்’ என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘ரோஹித் ஷர்மாவின் ரெக்கார்டுகள் சேவாக்கின் ரெக்கார்டுகளை விட நன்றாக இருக்கலாம். ஆனால் ரோஹித் ஷர்மாவின் அதிரடி ஆட்டத்திற்கு காரணம் சேவாக்தான். சேவாக் அதிரடியாக ஆடியதைப் பார்த்து, அவருக்குப் பின் வந்த வீரர்களின் மனநிலையையும் மாற்றியது’ என சாக்குலைன் முஷ்டாக் கூறியுள்ளார். சேவாக்கின் ஸ்ட்ரைக் ரேட், டெஸ்ட் போட்டிகளில் 82.2, ஒருநாள் போட்டிகளில் 104.3, டி20 போட்டிகளில் 145.3 என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்