‘இப்படியொரு கம்பேக் கொடுப்பாங்கன்னு கொஞ்சம் கூட எதிர்பாக்கல’!.. விமர்சனம் செஞ்சவரையே புகழ வச்சு ‘கெத்து’ காட்டிய சிஎஸ்கே..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசிஎஸ்கே அணியில் இந்த ஆண்டு செய்யப்பட்ட மாற்றங்கள் குறித்து முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் புகழ்ந்து பேசியுள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுவரை 29 லீக் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் 8 போட்டிகளில் விளையாடி, 6 வெற்றிகளுடன் டெல்லி கேப்பிடல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. அதேபோல் 7 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 வெற்றிகளுடன் 2-வது இடத்தில் இருந்து வருகிறது. ஆனாலும் ரன் ரேட்டை ஒப்பிடுகையில் டெல்லி அணியை (+0.547) விட சிஎஸ்கே அணியே (+1.263) முன்னிலையில் உள்ளது.
கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதனால் அந்த தொடரில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு நுழையாமல் சென்னை அணி வெளியேறியது. இதுவரை நடந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே ப்ளே ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது அதுதான் முதல்முறை. இது சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.
மேலும் சென்னை அணியின் வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதனால் அந்த தொடர் முழுவதும் சென்னை அணி பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வந்தது. குறிப்பாக கேப்டன் தோனியின் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இந்த விமர்சனங்கள் அனைத்தையும் தவிடுபொடியாக்கி இந்த ஆண்டு மாபெரும் கம்பேக்கை சென்னை அணி கொடுத்துள்ளது.
அதில், இளம்வீரர் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இவரது ஆட்டம் குறித்து சென்னை அணியின் நட்சத்திர வீரரான சுரேஷ் ரெய்னா புகழ்ந்து பேசியிருந்தார். அதேபோல் டு ப்ளசி, தொடர்ந்து 4 முறை அரைசதம் அடித்து அசத்தினார். இந்த தொடரில் இதுவரை மொத்தமாக 320 ரன்களை டு ப்ளசி குவித்துள்ளார். மேலும் ஆல்ரவுண்டர் ஜடேஜா, பேட்டிங், பவுலிங், பீல்டிங் என மூன்றிலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
நடப்பு ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் முன்னதாக பலரும் எந்த அணி கோப்பையை வெல்லும் என தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். அப்போது சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரரான ஸ்காட் ஸ்டைரிஸ் (Scott Styris), சென்னை அணி இந்த ஆண்டு கடைசி இடத்தைதான் பிடிக்கும் என குறிப்பிட்டிருந்தார். இது சென்னை ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
Ex Machi. Why Machi? #Yellove Machi
📸: @IPL pic.twitter.com/Z3gO3eLHyI
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) April 4, 2021
இந்த நிலையில் தற்போது சிஎஸ்கே அணியை புகழ்ந்து ஸ்காட் ஸ்டைரிஸ் பேசியுள்ளார். அதில், ‘உண்மையை சொல்ல வேண்டுமானால், முதலில் சென்னை அணி மீது நான் நம்பிக்கை வைக்கவில்லை. அவர்கள் மீண்டு வருவார்கள் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் சிஎஸ்கே மிகவும் புத்திசாலித்தனமான அணி, அற்புதமான பல முடிவுகளை எடுத்துள்ளது.
சுரேஷ் ரெய்னா, அம்பட்டி ராயுடு ஆகிய இருவரையும் பேட்டிங் ஆர்டரில் கீழே இறக்கினர். 3-வது ஆர்டரில் ரெய்னாதான் முக்கியமான வீரராக கருதப்பட்டார். ஆனால் அவருக்குப் பதிலாக மொயின் அலியை களமிறங்கியது சிறப்பான முயற்சி. ரெய்னாவின் வயது மற்றும் சமீபத்தில் அவர் கிரிக்கெட் விளையாடாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது’ என ஸ்காட் ஸ்டைரிஸ் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயின் அலியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. வழக்கமாக இங்கிலாந்து அணி இவரை பின் வரிசையில்தான் களமிறக்கும். ஆனால் சிஎஸ்கே அணி அவரை 3-வது வீரராக களமிறக்கியது. தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட மொயின் அலி, 7 போட்டிகளில் விளையாடி 206 ரன்களை குவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பவுலிங்கிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்