"எல்லாத்தையும் பக்காவா பண்ற 'மும்பை' டீம்.. இதையும் கொஞ்சம் யோசிச்சு பண்ணியிருக்கலாம்.. இப்டி ஒரு தப்ப பண்ணிட்டாங்களே.." அனுதாபப்பட்ட 'முன்னாள்' வீரர்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு14 ஆவது ஐபிஎல் சீசன் சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இதற்காக கடந்த பிப்ரவரி மாதம் மினி ஏலம் நடைபெற்றிருந்தது.
இந்த ஏலத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி, 20 வயதேயான தென்னாபிரிக்க இளம் வேகப்பந்து வீச்சாளர் மார்கோ ஜேன்சன் (Marco Jansen) என்பவரை ஏலத்தில் எடுத்திருந்தது. மேலும், ஜிம்மி நீஷம், ஆடம் மில்னே என அனுபவம் வாய்ந்த வெளிநாட்டு வீரர்கள் சிலரையும் இந்த ஏலத்தில் மும்பை அணி எடுத்திருந்தது.
இதனைத் தொடர்ந்து, பெங்களூர் அணிக்கு எதிரான முதல் போட்டியிலேயே, சர்வதேச போட்டிகளில் அதிக அனுபவமில்லாத மார்கோ ஜேன்சனை மும்பை அணி களமிறக்கியது. ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் பந்து வீசிய மார்கோ ஜேன்சன், 4 ஓவர்களில் 28 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.
இந்நிலையில், இன்று நடைபெற்று வரும் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியிலும், மார்கோ ஜேன்சனை மும்பை அணி களமிறக்கியுள்ளது. ஆனால், நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் (Scott Styris), ஜேன்சனை ஆரம்பத்திலே அணியில் சேர்த்து, மும்பை அணி தவறு செய்ததாக கூறியுள்ளார்.
'சுமார் 6 அடிக்கு மேல் உயரம் கொண்ட ஜேன்சன், மிகவும் அற்புதமாக பந்து வீசுகிறார். பவுன்சர் மற்றும் ஸ்லோ பந்துகளை மிகக் கச்சிதமாக அவர் வீசி வருகிறார். அது மட்டுமில்லாமல், ஐபிஎல் போட்டிகளில் கிட்ட தட்ட 10 ஆண்டுகள் வரை அவர் ஆடவும் வாய்ப்புள்ளதாக நான் கருதுகிறேன். ஆனால், சில வழிகளை வைத்து பார்க்கும் போது, மார்கோ ஜேன்சனை இப்போதே ஆட வைப்பது, மும்பை அணி எடுத்த தவறான முடிவாகும்.
ஏனென்றால், அவர்கள் ஜென்சனை ஆரம்பத்திலேயே களமிறக்கியுள்ளதால், நாம் அனைவரும் அந்த வீரரின் சிறந்த பந்து வீச்சு பற்றி அதிகம் பேசிக் கொண்டிருக்கிறோம். இதனால், அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்பாக, மிகப் பெரிய அளவில் ஏலம் நடைபெறுவதாக கருதப்படும் நிலையில், மார்கோ ஜேன்சனை மற்ற அணிகள் எடுக்க போட்டி போடும் என்பதால், அவரைத் தக்க வைக்க வேண்டி, மும்பை அணி அதிக தொகை செலவு செய்ய வேண்டியிருக்கும்.
இதனால், இந்த சீசனில் அவரை அதிகம் போட்டிகளில் உட்கார வைத்து விட்டு, அடுத்த சீசன் முதல் சிறப்பாக பயன்படுத்த மும்பை அணி யோசித்திருக்க வேண்டும். மும்பை அணியில் மலிங்கா இருந்ததைப் போல, மார்கோ ஜேன்சனை அணியில் இடம்பிடிக்கச் செய்யும் வகையில், அவரை மும்பை அணி பயன்படுத்த திட்டமிட்டிருக்க வேண்டும்' என ஸ்காட் ஸ்டைரிஸ் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்