வறுமை... கருவிலேயே என்னை கலைத்துவிட சொன்னார் அப்பா - SBI-ன் முதல் பெண் தலைவர் அருந்ததி
முகப்பு > செய்திகள் > விளையாட்டு"எனது குடும்பம் மிகவும் வறுமையால் தவித்துள்ளது. நான் கருவில் இருந்த போது மோசமான பொருளாதார நெருக்கடியால் என்னை கலைத்துவிட அப்பா நினைத்துள்ளார். ஆனால், அம்மாதான் என்னை நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையைக் கொண்டு இருந்துள்ளார்" எனக் கூறுகிறார் ஸ்டேட் பாரத வங்கி (SBI)-யின் முதல் பெண் தலைவர் அருந்ததி.
210 ஆண்டுகள் பழமையான எஸ்பிஐ வங்கியின் வரலாற்றிலேயே முதன் முறையாக பெண் ஒருவர் ஒட்டுமொத்தத் தலைமைப் பொறுப்பையும் ஏற்று இருந்தார் என்றால் அது அருந்ததி பட்டாச்சார்யா தான். கொல்கத்தாவில் பிறந்த வளர்ந்த அருந்ததி வங்கித் துறையில் அளப்பரிய பெரும் சாதனைகளைப் படைத்துள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு ஃபோர்ப்ஸ் பத்திரிகை அருந்ததியை உலகின் டாப் 25 சக்தி வாய்ந்த பெண்களுள் ஒருவர் ஆகத் தேர்ந்தெடுத்தது.
இதுபோக, ஃபார்ச்சூன் இதழின், ‘ஆசிய பசிபிக் நாடுகளின் சக்தி வாய்ந்த பெண்’ பட்டியலிலும், இந்தியா டுடே-வின் ‘உலகின் சக்தி வாய்ந்த பெண்கள்’ பட்டியலிலும் இடம் பிடித்தவர் அருந்ததி பட்டாச்சார்யா. தற்போது தனது வெற்றிப்பயணம், சாதனைகள், கடந்த வந்த பாதைகள் என அனைத்தையும் குறித்து ஒரு புத்தகம் எழுதி உள்ளார் அருந்ததி.
Indomitable: `A working woman’s notes on life, work and leadership’ என்கிற அருந்ததியின் புத்தகம் வருகிற 2022-ம் ஆண்டு வெளியாக உள்ளது. இதற்காக தற்போது தனது வாழ்க்கையின் சில கட்டங்களை அவரே பகிர்ந்துள்ளார். “நான் என் தாயின் கருவில் இருந்த போது என்னை கருவிலேயே கலைத்துவிடலாமா என்று எனது தந்தை யோசித்து இருக்கிறார். எனது பெற்றோருக்கு நான் மூன்றாவது குழந்தை.
ஆனால், கருவிலேயே என் மீது நம்பிக்கை வைத்து என்னால் பல நல்லதுகள் நடக்கும் என என்னைப் பெற்று எடுத்துள்ளார் எனது தாய். எங்கள் குடும்பத்தில் நான் பிறந்த போது எனது அப்பாவுக்கு ஒரு வேலை கிடையாது. இதனால் வறுமை உச்சத்தில் இருந்தது. கடுமையான பொருளாதார நெருக்கடிகளில் சிக்கி இருந்தோம்” எனக் கூறி உள்ளார்.
ஒரு சாதாரண புரோபேஷனரி அதிகாரி ஆக கடந்த 1977-ம் ஆண்டு தனது 22-வது வயதில் எஸ்பிஐ-க்குள் அடியெடுத்து வைத்துள்ளார் அருந்ததி. அதன் பின்னர் எஸ்பிஐ-யின் பல கட்ட பதவிகளையும் வகித்து வந்த அருந்ததி எஸ்பிஐ-யின் முதல் பெண் தலைவர் என்னும் பெரும் பதவியில் அமர்ந்து மாபெரும் சரித்திர சாதனையைப் படைத்தார்.
“எப்போதும் ‘சேர்மேன்’ என ஆண் பால் கொண்டு அழைக்கப்பட்டு வந்த எஸ்பிஐ தலைமை பதவியை ஆண் தலைவர்கள் மட்டுமே வகித்து வந்தனர். ஆனால், முதன் முறையாக அந்தப் பதவியை நான் கையில் எடுத்து எஸ்பிஐ வரலாற்றிலேயே புது வார்த்தையாக ‘சேர்பெர்சன்’ என்னும் பொதுப்பாலின தலைமையை கொண்டு வந்ததற்கான அடிப்படையாக இருந்தேன்” என தனது சாதனையை தனது புத்தகத்தில் விவரித்து உள்ளாராம் அருந்ததி.
அருந்ததி கடந்த 2017-ம் ஆண்டு ‘Prepare for Unknown’ என்னும் ஒரு புத்தகத்தையும் அதன் பின்னர் ‘பணிபுரியம் பெண்களின் வாழ்க்கை, வேலை மற்றும் தலைமை குறித்த குறிப்புகள்’ என்னும் புத்தகத்தையும் எழுதி உள்ளார். தற்போது வெளியீட்டுக்குத் தயாராகி இருப்பது அவருடைய 3-வது புத்தகம் ஆகும்.
மற்ற செய்திகள்