‘ரசிகர்களின் நீண்ட நாள் ஏக்கம்’!.. தோனிக்கு ‘Farewell’ மேட்ச் நடக்காததுக்கு இதுதான் காரணம்.. முன்னாள் தேர்வாளர் கொடுத்த விளக்கம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதோனிக்கு வழி அனுப்பும் போட்டி அமையாததற்கான காரணத்தை இந்திய அணியின் முன்னாள் தேர்வாளர் சரண்தீப் சிங் விளக்கியுள்ளார்.
கடந்த 2004-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் தோனி அறிமுகமானார். கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடியுள்ள தோனி, பல சாதனைகளை படைத்துள்ளார். இவர் தலைமையிலான இந்திய அணி டி20 உலகக்கோப்பை, ஒருநாள் தொடருக்கான உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய கோப்பைகளை வென்றுள்ளது. ஐசிசி நடத்தும் இந்த மூன்று வகையான கிரிக்கெட் தொடர்களிலும் கோப்பையை வென்ற ஒரே கேப்டன் தோனி மட்டும்தான்.
இதுவரை 90 டெஸ்ட் போட்டிகள், 350 ஒருநாள் மற்றும் 98 டி20 போட்டிகளில் தோனி விளையாடியுள்ளார். கடைசியாக 2019-ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் போட்டிக்கான உலகக்கோப்பை தொடரில் தோனி விளையாடி இருந்தார். இதனை அடுத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் இருந்த அவர், கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தோனியின் இந்த திடீர் அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது.
இந்திய அணிக்காக டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான உலகக்கோப்பையை வென்று கொடுத்த கேப்டனுக்கு ஒரு வழி அனுப்பதல் (Farewell) போட்டி வைக்க வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வலியுறுத்தி வந்தனர். ஆனால் தற்போதுவரை அவருக்கு வழி அனுப்பதல் போட்டி நடத்தப்படவில்லை.
இந்த நிலையில் இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் தேர்வாளர் சரண்தீப் சிங் தற்போது விளக்கம் கொடுத்துள்ளார். அதில், ‘தோனிக்கு வழி அனுப்பும் போட்டி அமையாததற்கு காரணம் டி20 உலகக்கோப்பை தொடர்தான். ஏனென்றால் கடந்த 2020-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்க வேண்டிய டி20 உலகக்கோப்பை தொடர் கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. ஒருவேளை அந்த தொடர் நடைபெற்றிருந்தால், நிச்சயம் தோனி அதில் விளையாடியிருப்பார். அப்போது முறையான வழி அனுப்புதலுடன் அவர் விடை பெற்றிருப்பார்’ என சரண்தீப் சிங் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்