"என் கன்னத்துல அறைஞ்ச மாதிரி இருந்துச்சு".. GOD சச்சினிடம் ஸ்லெட்ஜிங்.. பல வருஷம் கழிச்சு மனம் திறந்த சக்லைன் முஷ்டாக்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சக்லைன் முஷ்டாக் கிரிக்கெட்டின் பிதாமகன் என அழைக்கப்படும் சச்சின் குறித்து மனம் திறந்திருக்கிறார்.
Images are subject to © copyright to their respective owners.
சச்சின் டெண்டுல்கர்
உலக கிரிக்கெட் வரலாற்றில் எப்போதும் நிலைத்திருக்கக்கூடிய பெயர் சச்சின் டெண்டுல்கர். அதிக ஒருநாள் போட்டிகள், அதிக சதங்கள் என சச்சின் வைத்திருக்கும் ரெக்கார்டுகளை முறியடிக்க இன்றும் பல முன்னணி வீரர்கள் திணறிவருகின்றனர். 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய சச்சின் 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார்.
தனது 24 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில், டெண்டுல்கர் 53.78 சராசரியுடன் 15,291 டெஸ்ட் ரன்களையும், 44.83 சராசரியில் 18,426 ODI ரன்களையும் எடுத்துள்ளார். அவர் டெஸ்ட் போட்டிகளில் 51 சதங்களையும் ஒருநாள் போட்டிகளில் 49 சதங்களையும் விளாசியுள்ளார். இப்படி பல சாதனைகளை படைத்த சச்சின் கடந்த 2013 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
Images are subject to © copyright to their respective owners.
ஸ்லெட்ஜிங்
பொதுவாக கிரிக்கெட்டில் ஸ்லெட்ஜிங் சாதாரணமாகிவிட்டது. எதிரணி வீரரின் கவனத்தை திசைதிருப்ப அவரை வசைபாடுவது சில வீரர்களின் வாடிக்கை. ஆனால், யாரிடம் அதனை மேற்கொள்ளவேண்டும் என தெரியவில்லை என்றால் அதற்கான விலையை கொடுக்க வேண்டிவரும். அப்படியான ஒரு சம்பவம் பற்றித்தான் சக்லைன் முஷ்டாக் பேசியிருக்கிறார். கனடாவில் நடைபெற்ற போட்டியில் சச்சின் தன்னை நிலைகுலைய செய்துவிட்டதாகவும் தெரிவித்திருக்கிறார் முஷ்டாக்.
சக்லைன் முஷ்டாக்
இதுகுறித்து பேசியுள்ள முஷ்டாக் ,"கனடாவில் மேட்ச் நடைபெற்றது. நான் இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட் விளையாடிவிட்டு சென்றிருந்தேன். ஒரு ஓவரில் அவரை தடுமாற செய்ததாக கருதி அவரிடம் சில மோசமான சொற்களை பயன்படுத்தினேன். ஆனால், அமைதியாக இருந்த அவர் என்னிடம்,"சக்லைன், நீங்கள் இப்படிப்பட்டவர் என நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. இப்படிப்பட்ட வார்த்தைகளை நீங்கள் பயன்படுத்தக்கூடியவர் என்று நான் உங்களைக் கருதவில்லை. நீங்கள் நாகரிகமான நபர் மற்றும் நல்ல மனம் படைத்தவர் என நினைத்தேன்" என்றார்.
Images are subject to © copyright to their respective owners.
நான் தடுமாறிப்போய்விட்டேன். அவருடைய வார்த்தைகள் என்னை தாக்கிவிட்டது. என்னுடைய கவனம் குறைந்து, அவருடைய சொற்களை பற்றியே யோசித்துக்கொண்டிருந்தேன். ஆனால், அவர் தனது பேட்டிங்கை வலுப்படுத்தி கொண்டிருந்தார். ஓவருக்கு ஒரு பவுண்டரி என அடித்தார். என்னுடைய ஓவரில் இறங்கிவந்து ஒரு ஷாட் அடித்தார். எனது கன்னத்தில் அறைந்தது போல இருந்தது.. அப்போதுதான் நினைத்தேன். சச்சினுடைய வார்த்தைகள் என்னை எப்படி மாற்றிவிட்டது என்று. மாலையில் ஹோட்டலில் சந்தித்த போது, நீங்கள் மிகவும் புத்திசாலி சச்சின் என்றேன். அவர் சிரித்தார். அதுதான் அவருடைய மிகப்பெரிய பலம்" என தெரிவித்திருக்கிறார்.
மற்ற செய்திகள்