‘அதெப்படி என்னை எடுக்காமல்’... ‘தேர்வுக் குழு அறைக்குப் போய்’... ' பயிற்சியாளரின் காரியத்தால்’... ‘அதிர்ந்த பிசிசிஐ'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் பயிற்சியாளர்கள் தேர்வு குழு உறுப்பினரின் அறைக்கு சென்று, தான் புறக்கணிக்கப்பட்டது குறித்து பேட்டிங் பயிற்சியாளர் ஒருவர், கடுமையாக பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
உலகக் கோப்பை தொடருடன் இந்திய அணியின் பயிற்சியாளர்கள் பதவிக்காலம் முடிவடைந்ததால், தலைமை பயிற்சியாளர் உள்பட பல்வேறு பொறுப்புகளுக்கு சமீபத்தில் பிசிசிஐ ஆட்களை தேர்வு செய்தது. அதில் ரவி சாஸ்திரி, வரும் 2021 டி20 உலகக் கோப்பை தொடர் வரை, தலைமைப் பயிற்சியாளராக தொடர்வார் என பிசிசிஐ அறிவித்தது. அதன்பின்னர், மற்ற பயிற்சியாளர்களுக்கான தேர்வு நடைப்பெற்று, கடந்த இரு வாரங்களுக்கு முன்பு பேட்டிங், பீல்டிங் மற்றும் பவுலிங் பயிற்சியாளர்கள் பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் கடந்த 5 ஆண்டுகளாக பேட்டிங் பயிற்சியாளராக இருந்த சஞ்சய் பங்கருக்கு பதிலாக, விக்ரம் ரத்தோர் தேர்வு செய்யப்பட்டார். மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடருடன் சஞ்சய் பங்கரின் பதவிக் காலம் முடிவடைந்தது. இந்நிலையில் பேட்டிங் பயிற்சியாளர்களுக்கான நேர்காணல் நடைப்பெற்று கொண்டிருந்தபோது, தேர்வுக்குழுவில் ஒருவரான தேவங் காந்தியின் அறையை, முரட்டுத்தனமாக திறந்து உள்ளே சென்ற சஞ்சய் பங்கர், தனக்கு மீண்டும் பயிற்சியாளர் பதவி வழங்கப்படாதது குறித்து, தேர்வு குழுவினரிடம் கடுமையாக பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும், இந்தப் பதவியில் தனக்கு பதிலாக, வேறு ஒருவரை நியமிக்கும் முடிவு சரியானது அல்ல என்று, சஞ்சய் பங்கர் கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தன்னை பேட்டிங் பயிற்சியாளராக தேர்வு செய்யவில்லை என்றாலும், தேசிய கிரிக்கெட் அகாடமியில் ஒரு பொறுப்பை தந்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறியதாகவும் தெரிகிறது. ஆனால், பங்கரின் இந்த மோசமான நடத்தையால், பிசிசிஐ கடும் அதிருப்தியில் உள்ளதாகவும், இவரின் செயல் குறித்து நிர்வாரிகள் தலைவர் வினோத் ராயின் பார்வைக்கு கொண்டு செல்லப்படவுள்ளாதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இதுகுறித்து புகார் அளித்தால், அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதற்கிடையில், உலகக் கோப்பை தொடரின்போது இந்திய அணியின் மூத்த வீரரான தோனியை, முன்னதாக களமிறக்கும் முடிவுக்கு சஞ்சய் பங்கர் எதிராக இருந்ததாகத் தெரிகிறது. இதனால் பல குழப்பங்கள் ஏற்பட்டதையடுத்து, அவர் மீதான நம்பிக்கை இந்திய அணியினரிடையே குறைந்ததாகவும் கூறப்படுகிறது.