'நமக்கு தான் அவர் சுட்டிக் குழந்தை... ஆனா அவருக்கு ரொம்ப பெரிய மனசு'!.. சாம் கர்ரனின் உருக்கமான பேச்சு!.. 'நட்டு'வ பத்தி சுட்டிக்குழந்தை சொன்னது என்ன தெரியுமா?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் தன்னால் இயன்றவரை இங்கிலாந்து அணிக்கு வெற்றியை பெற்று கொடுக்க போராடியதாகயும், இந்திய வீரர் நடராஜனின் சிறப்பான ஆட்டம் குறித்தும், சாம் கர்ரான் உருக்கமாக பேசியுள்ளார்.
புனேவில் நடைபெற்ற கடைசி மற்றும் மூன்றாவது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு விராட் கோலி, கே.எல் ராகுல், ரோஹித் சர்மா போன்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தாலும், ஷிகர் தவான் (67), ரிஷப் பண்ட் (78) மற்றும் ஹர்திக் பாண்டியா (64) ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தின் மூலம் இந்திய அணி 329 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது.
இதனையடுத்து 330 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று கடின இலக்கை துரத்தி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர்களான ஜேசன் ராய் 14 ரன்களிலும், பாரிஸ்டோ 1 ரன்னிலும் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தனர்.
அடுத்தடுத்து களமிறங்கிய பேட்ஸ்மேன்களில் டேவிட் மாலன் மட்டும் 50 ரன்கள் குவித்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பிரமாதமாக விளையாடாமல் விக்கெட்டை இழந்தாலும், 8வது விக்கெட்டுக்கு களமிறங்கிய சாம் கர்ரன் யாரும் எதிர்பாராத ஒரு அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி போட்டியையே தலை கீழாக மாற்றினார்.
அனைத்து பந்துவீச்சாளர்களையும் சாம் கர்ரான் அசால்டாக சமாளித்ததன் மூலம் கடைசி ஒரு ஓவருக்கு 14 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலை இங்கிலாந்து அணிக்கு ஏற்பட்டது. போட்டியின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் கடைசி ஓவரை வீசிய தமிழக வீரர் நடராஜன் தனது துல்லியமான யார்கர் மூலம், அந்த ஓவரில் வெறும் 6 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து, இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெறச்செய்தார். தனி ஒருவனாக போராடி இந்திய அணிக்கு மரண பயத்தை காட்டிய சாம் கர்ரன் 83 பந்துகளில் 3 சிக்ஸர் மற்றும் 9 பவுண்டரிகளுடன் 95 ரன்கள் குவித்து இறுதி வரை விக்கெட்டை இழக்காமல் இருந்தார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம் 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் இந்திய அணி கெத்தாக கைப்பற்றியது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வியடைந்திருந்தாலும் தனி ஒருவனாக போராடிய சாம் கர்ரன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
ஆட்டநாயகன் விருது வென்ற பிறகு பேசிய சாம் கர்ரன், தன்னால் இயன்றவரை வெற்றி பெற போராடியதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து சாம் கர்ரான் பேசுகையில், "இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெறவில்லை. எனினும், நான் விளையாடிய விதம் எனக்கு பிடித்திருந்தது. வெற்றி பெறுவது எனக்கு மிகவும் பிடிக்கும், இந்த போட்டியில் எனக்கு கிடைத்துள்ள அனுபவம் மிகப்பெரியது. நீண்ட நாட்களாக இங்கிலாந்து அணிக்காக நான் இது போன்ற ஒரு விளையாட்டை வெளிப்படுத்தவில்லை. ஆனால், இறுதியில் நாங்கள் தோல்வியடைந்துள்ளோம். பந்துகளை தடுத்து விளையாடுவதே மிகுந்த சிரமமாக இருந்தது.
நடராஜன் மிக சிறப்பாக பந்துவீசினார். இக்கட்டான கடைசி நேரத்தில் அவர் எவ்வளவு சிறந்த பந்துவீச்சாளர் என்பதை நிரூபித்துவிட்டார். புவனேஷ்வர் குமாரும் மிக அருமையாக பந்துவீசினார். நிறைய விசயங்களை இந்த தொடரின் மூலம் கற்று கொண்டேன், ஐபிஎல் தொடரை எதிர்நோக்கி காத்துள்ளேன்" என்று கூறி முடித்தார்.
மற்ற செய்திகள்