வேறவழியில்ல.. மறுபடியும் டீம்ல இடம்பிடிக்க ‘இததான்’ பண்ணியாகணும்.. குல்தீப் யாதவின் பரிதாப நிலை..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகுல்தீப் யாதவ் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்க பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் ஆலோசனை கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ், தனது சிறப்பான பந்து வீச்சின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வகையான போட்டியிலும் இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரராக விளையாடி வந்தார். இப்படி இருக்கையில் கடந்த 2019-ம் ஆண்டிலிருந்து குல்தீப் யாதவின் கிரிக்கெட் வாழ்க்கையில் சரிவு ஏற்பட தொடங்கியது. அதே ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரிலும் சற்று தடுமாறினார்.
இதனை அடுத்து விளையாடிய சர்வதேச தொடர்களிலும் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்த முடியாமல் குல்தீப் யாதவ் திணறினார். தோனி இருக்கும் வரை அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்து வந்தது. ஆனால் தோனி ஓய்வுக்குபின், இந்திய அணியில் இருந்து முழுவதுமாக குல்தீப் யாதவ் ஒதுக்கப்பட்டார். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூட, தோனி இல்லாதது தனக்கு பெரிய இழப்பு என தனது ஆதங்கத்தை குல்தீப் வெளிப்படுத்தியிருந்தார்.
தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணியிலும் குல்தீப் யாதவ் இடம்பெறவில்லை. இதுமட்டுமல்லாமல் இந்த வருடம் நடந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் இடம் பெற்ற குல்தீப் யாதவை, ஒரு போட்டியில் கூட அணி நிர்வாகம் விளையாட வைக்கவில்லை. இதனால் மன வருத்தத்தில் குல்தீப் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்திய அணிக்கு குல்தீப் யாதவ் மீண்டும் திரும்ப, பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சல்மான் பட் ஆலோசனை கூறியுள்ளார். அதில், ‘குல்தீப் யாதவுக்கு தற்போது தன்னம்பிக்கை குறைந்துள்ளது. டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி இருந்தால் அவர் பார்முடன் இருந்திருப்பார். ஆனால் டெஸ்ட் போட்டிகளில் குல்தீப் நிராகரிக்கப்பட்டுள்ளதால் அவருடைய தன்னம்பிக்கையின் அளவு குறைந்துள்ளது.
அதனால் அவர் மீண்டும் ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாட வேண்டும். அதில் விளையாடி இழந்த தனது பார்மை மீட்டு எடுத்தால், அவருக்கு ஒரு நம்பிக்கை பிறக்கும். திரும்பவும் அவர் இந்திய அணியில் இடம்பிடிக்கும்போது இந்த நம்பிக்கை அவருக்கு கைகொடுக்கும்’ என சல்மான் பட் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்