'அவங்க ரெண்டு பேரும் முதல்ல இந்தியர்கள்’... ‘இத முதல்ல புரிஞ்சுக்கங்க’... ‘கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் ஆதங்கம்’...!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகேப்டன் விராட் கோலி மற்றும் அஜிங்க்யா ரஹானே இருவரையும் பலரும் ஒப்பிட்டு கருத்துக்களை தெரிவித்து வருவது குறித்து சச்சின் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் அடிலெய்டில் நடந்த பகலிரவு முதல் போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வியை அடைந்தது. இதற்கிடையில் விராட் கோலி குழந்தை பிறப்பு காரணமாக நாடு திரும்பியதால், மேலும் விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், டெஸ்ட் அணிக்கு தற்காலிக கேப்டனான அஜிங்க்யா ரஹானேவின் தலைமையில் இந்திய அணி மெல்போர்னில் இரண்டாவது டெஸ்ட் போட்டியை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 2-வது போட்டியில் சிறப்பான வெற்றியை, ரஹானே இந்திய அணிக்காக பெற்று தந்ததுமின்றி பல்வேறு வரலாற்று நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளன.
வீரர்களை திறமையாக திட்டமிட்டு பயன்படுத்தி பொறுமையான அணுகுமுறை மூலம் இந்த வெற்றியை ரஹானே பெற்றதாக பலரும் பாராட்டு தெரிவித்தனர். ரஹானேவின் கேப்டன்ஷிப் குறித்து முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்கள் பாண்டிங் உள்ளிட்டவர்கள் பாராட்டு தெரிவித்தது குறித்து முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். அடுத்த கேப்டனாவதற்கான வாய்ப்பு ரஹானேவிற்கு உள்ளது குறித்து முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த்தும் சூசகமாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கேப்டன் விராட் கோலி மற்றும் ரஹானே இருவரையும் ஒப்பீடு செய்ய வேண்டாம் என்று கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கேட்டுக் கொண்டுள்ளார். அவர் கூறுகையில், ‘ரசிகர்கள் விராட்டுடன் ரஹானேவை ஒப்பிடக்கூடாது. அஜிங்க்யா ரஹானேவுக்கு வித்தியாசமான ஆளுமை இருக்கிறது.
அவரது நோக்கம் ஆக்ரோஷமானது. அவர்கள் இருவருமே இந்தியர்கள் என்பதை அனைவருக்கும் நினைவூட்ட விரும்புகிறேன். அவர்கள் இருவரும் இந்தியாவுக்காக விளையாடுகிறார்கள். தனிநபர்களை காட்டிலும் நாடு தான் முக்கியம். அணியும், நாடும் எல்லாவற்றிற்கும் மேலாக உள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்