‘கிரிக்கெட் மேல அவ்ளோ லவ்’!.. இந்தியா மேட்சை பார்க்க ‘மலை’ உச்சிக்கு ஏறிய சச்சினின் தீவிர ரசிகர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா-இங்கிலாந்துக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியை மலை உச்சியில் இருந்து பார்த்த சச்சின் தீவிர ரசிகரின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கிலும், டி20 தொடரை 3-2 என்ர கணக்கிலும் வென்று இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது. இதனை அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன.
இதன் முதல் ஒருநாள் போட்டி நேற்றுமுன்தினம் புனே மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 317 ரன்களை குவித்தது. இதில் தொடக்க ஆட்டக்காரரர் ஷிகர் தவான் 98 ரன்களும், கேப்டன் கோலி 56 ரன்களும் எடுத்தனர். மேலும் விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் 62 ரன்களும், ஆல்ரவுண்டர் க்ருணால் பாண்ட்யா 58 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து 318 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி, 42.1 ஓவர்களில் 251 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் தீவிர ரசிகர் சுதிர் குமார் சவுத்ரி, இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியை மலை உச்சியில் இருந்து பார்த்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக சென்னையில் நடைபெற்ற இந்தியா-இங்கிலாந்துக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து 50 சதவீத பார்வையாளர்கள் மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் தற்போது நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், டி20 தொடரில் இருந்து ரசிகர்கள் இல்லாமல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்