"'நியூசிலாந்து' டீம் அந்த ஒரு எடத்துல கொஞ்சம் 'மோசமா' தான் இருக்கு.. இந்த 'சான்ஸ' மிஸ் பண்ணிடாதீங்க.." 'இந்திய' அணிக்கு கிடைத்திருக்கும் பொன்னான 'வாய்ப்பு'?!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமுதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி, இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் மைதானத்தில், இம்மாதம் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இந்த போட்டியில் மோதவுள்ள நிலையில், டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரையில், இரு அணிகளுமே பலம் வாய்ந்த அணி என்பதால், முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையைக் கைப்பற்ற நிச்சயம் இரு அணிகளும் முனைப்பு காட்டும் என்பதில் சந்தேகமேயில்லை.
இதற்காக, இரு அணிகளும் தற்போது இங்கிலாந்தில் முகாமிட்டுள்ள நிலையில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு முன்பாக, இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டி தொடரிலும் நியூசிலாந்து அணி மோதி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி, டிராவில் முடிந்துள்ள நிலையில், அடுத்த டெஸ்ட் போட்டி, வரும் பத்தாம் தேதி ஆரம்பமாகிறது.
மேலும், இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான டெவான் கான்வே (Devon Conway), இரட்டை சதமடித்து சாதனை புரிந்திருந்தாலும், அந்த அணியினரின் மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசை, தடுமாற்றம் கண்டதால், அதிக ரன்களை அந்த அணியால் குவிக்க முடியவில்லை. நியூசிலாந்து அணியினரின் செயல்பாடு, தற்போது இந்திய அணிக்கு மிகவும் முக்கியம் என்பதால், இங்கிலாந்து அணிக்கு எதிராக நியூசிலாந்து ஆடியதை நிச்சயம் இந்திய அணி உன்னிப்பாக கவனித்திருக்கும்.
இந்நிலையில், நியூசிலாந்து அணியின் மிடில் ஆர்டர் வரிசை சொதப்பலை இந்திய அணி, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சபா கரீம் (Saba Karim) தெரிவித்துள்ளார்.
இது பற்றி பேசிய அவர், 'இந்தியா மற்றும் நியூசிலாந்து என இரண்டு அணிகளிலும் பிரச்சனை உள்ளது. ஆனால், நியூசிலாந்து அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங், படு மோசமானதாக காணப்படுகிறது. அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் (Kane Williamson), பலம் வாய்ந்த பேட்ஸ்மேனாக திகழ்கிறார்.
அவரை மட்டும் அவுட் எடுத்து விட்டால், நியூசிலாந்து அணியை எளிதில் ஆல் அவுட் செய்து விடலாம். இது இந்திய அணி மட்டுமில்லாது, அனைத்து அணிகளுக்கும் தெரிந்த விஷயம் தான்' என சபா கரீம் தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளது போலவே, நியூசிலாந்து அணியின் பலவீனத்தை இந்திய அணி புரிந்து கொண்டு, அதற்கேற்ப செயல்பட்டு அசத்துவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மற்ற செய்திகள்