அவுட்டானதும் நேராக 'படி'யில் சென்று உட்கார்ந்த 'ரசல்'.. "என்னால முடியாம தான் அங்கேயே இருந்துட்டேன்.." மனதை நொறுங்க வைத்த 'காரணம்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகடந்த சீசனில், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த முறை சற்று அதிக பலத்துடனேயே காணப்படுகிறது.
இதுவரை நான்கு போட்டிகளில் ஆடியுள்ள சிஎஸ்கே, மூன்றில் வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலில் இரண்டாமிடம் வகிக்கிறது. இதில், கொல்கத்தா அணிக்கு எதிராக கடைசியாக நடைபெற்ற லீக் போட்டியில், 18 ரன்கள் வித்தியாசத்தில், சென்னை அணி திரில் வெற்றி பெற்றிருந்தது.
இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 220 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து, கடின இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணி, 31 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தவித்தாலும், அதன் பிறகு களமிறங்கிய ரசல் (Russell), தினேஷ் கார்த்திக் மற்றும் கம்மின்ஸ் ஆகியோர், அதிரடி காட்டி வெற்றிக்கு அருகே வரை அணியைக் கொண்டு வந்தனர்.
இருந்த போதும், விக்கெட்டுகள் அதிகம் கையில் இல்லாத காரணத்தால், கொல்கத்தா அணி தோல்வியைத் தழுவ நேரிட்டது. அது மட்டுமில்லாமல், இந்த போட்டியில் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடிக் கொண்டிருந்த ரசலை, திட்டம் போட்டு சென்னை வீரர் சாம் குர்ரான் அவுட் எடுத்தார். லெக் சைடில் வந்த பந்தை, ரசல் அடிக்காமல் தவிர்க்க, அந்த பந்து ஸ்டம்பை பதம் பார்த்தது. 22 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து அதிரடி காட்டிய ரசல், இன்னும் சில ஓவர்கள் களத்தில் நின்றிருந்தால், நிச்சயம் கொல்கத்தா அணி வெற்றி பெற்றிருக்கும்.
ஆனால், அதற்கு முன்பு அவர் ஆட்டமிழந்ததால், கொல்கத்தா அணி தோல்வி அடைந்திருந்தது. இதனிடையே, அவுட்டாகி பெவிலியன் சென்ற ரசல், டிரஸ்ஸிங் ரூம் செல்லாமல், அங்கிருந்த படியிலேயே வருத்தத்துடன் உட்கார்ந்திருந்தார். தன்னால் அணியை வெற்றி பெறச் செய்ய முடியவில்லையே என்ற ஏக்கத்தில், ரசல் அப்படி உட்கார்ந்திருந்த புகைப்படம், நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி இருந்தது.
இந்நிலையில், தான் டிரஸ்ஸிங் ரூம் செல்லாமல், அங்கேயே உட்கார்ந்திருந்த காரணம் பற்றி ரசல் (Russell) மனம் திறந்துள்ளார். 'எனது விக்கெட்டை நான் இழந்ததும், அதிகமாக உணர்ச்சிவசப்பட்டேன். இதனால், என்னால் அறைக்குச் செல்ல முடியவில்லை. அது மட்டுமில்லாமல், அப்படி ஒரு பந்தை தவற விட்டு, அவுட்டாகியதால், எனது அணியின் சக வீரர்களையும் என்னால் சந்திக்க இயலவில்லை. அப்படி ஒரு சூழ்நிலையில், நான் எனது அணியை வெற்றி பெறச் செய்திருக்க வேண்டும். ஆனால், எனது வேலையை நான் சரியாக முடிக்கவில்லை.
இதனால், நான் அதிகமாக உணர்ச்சி அடைந்தேன். ஆனாலும், அதிக வலிமையுடன் தான் இருந்தேன். பொதுவாக, நமது பணியை முடிக்காமல், நாம் அவுட்டானால், கோபம் தான் அதிகமாக வெளிப்படும். ஆனால், இந்த போட்டிக்கு பிறகு நான் சற்று வித்தியாசமாகவே இருந்தேன். நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன். மேலும், நான் அதிகம் மனமுடைந்தும் போனேன்' என ரசல் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்