இவர் மட்டும் ஐபிஎல் ஏலத்துல கலந்திருந்தா ரூ.200 கோடிக்கு ஏலம் போயிருப்பாரு.. ‘ப்ரோ தெரிஞ்சு தான் பேசுறீங்களா’.. வச்சு செய்யும் நெட்டிசன்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபாகிஸ்தான் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஐபிஎல் ஏலத்தில் 200 கோடிக்கு ரூபாய் எடுக்கப்பட்டிருப்பார் என ஒருவர் ட்வீட் செய்ததை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
ஐபிஎல் 15-வது சீசனுக்கான ஏலம் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் ஒவ்வொரு அணிகளும் வீரர்களை போட்டி போட்டு ஏலத்தில் எடுத்தன. குறிப்பாக இளம் வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் அதிக விலைக்கு ஏலம் போயினர். இந்த நிலையில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் ஷா அப்ரிடி மட்டும் ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொண்டிருந்தால், 200 கோடி ரூபாய்க்கு ஏலம் போயிருப்பார் என்று பாகிஸ்தான் செய்தியாளர் ஒருவர் ட்வீட் செய்துள்ளார்.
இதனால் கிரிக்கெட் ரசிகர்கள், பாகிஸ்தான் பத்திரிக்கையாளரை சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்து வருகின்றனர். என்னதான் உலக அளவில் இளம் வேகப்பந்துவீச்சாளராக அறியப்பட்டாலும், அதற்காக இப்படியா சொல்லுவீங்க என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். அதில் சிலர், ஒரு வீரருக்கு அதிகபட்சமாக 90 கோடி ரூபாய் வரை கொடுக்க முடியும், அப்படி 200 கோடி ஒரு வீரருக்கு கொடுத்தால், அவர் தான் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்தும் செய்ய வேண்டும் என கிண்டலாக பதிவிட்டுள்ளனர்.
இந்த ஐபிஎல் மெகா ஏலத்தில், மொத்தம் 10 அணிகள் கலந்துகொண்டு 204 வீரர்களை தேர்ந்தெடுக்க ரூ. 552 கோடி செலவிட்டுள்ளன. அதிகப்பட்சமாக விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான இஷான் கிஷன் ரூ. 15.25 கோடிக்கு மும்பை அணியால் எடுக்கப்பட்டார்.
பாகிஸ்தான் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஷாகின் ஷா அப்ரிடி, கடந்த ஆண்டு 36 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 78 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதில் 21 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். குறிப்பாக டெஸ்ட் போட்டிகள், டி20 உலகக்கோப்பையில் அப்ரிடியின் பந்துவீச்சு அருமையாக இருந்தது. அதனால் ஐசிசியின் கடந்த ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை ஷாகின் ஷா அப்ரிடி வென்றார்.
கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில், இந்தியாவிற்கு எதிரான போட்டியில் 31 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் இந்திய பேட்டிங் வரிசையில் முதல் 3 வீரர்களான ரோஹித் சர்மா, கே.எல். ராகுல் மற்றும் விராட் கோலி ஆகிய மூவரது விக்கெட்டையும் இவர் வீழ்த்தினார். அதனால் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் டி20 உலகக்கோப்பை வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வரலாறு படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்