'செம்ம பார்ம்ல இருக்கப்போவா இப்படி நடக்கணும்???'... 'அடுத்த சீசனில் காத்திருக்கும் சிக்கலால்'... 'CSKவின் ரூட்டைக் கையிலெடுக்கும் மும்பை?!!'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஅடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் திட்டத்தை மும்பை இந்தியன்ஸ் அணி பின்பற்றலாமென தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணி 2020 ஐபிஎல் கோப்பையை வென்றதன்மூலம் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் ஐபிஎல் கோப்பை வென்ற சிஎஸ்கேவின் சாதனையை சமன் செய்துள்ளது. நடந்து முடிந்த தொடர் முழுவதுமே மும்பை அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆதிக்கம் செலுத்தியதால், இதேபோல 2021 ஐபிஎல் தொடரிலும் அந்த அணி கோப்பை வெல்லலாம் என்ற பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
மேலும் 2021 ஐபிஎல் தொடரை வெல்லும் வாய்ப்பு மும்பை அணிக்கு அதிகமாக இருப்பதாகவே இறுதிப் போட்டியின் வெற்றிக்கு பின் பலரும் கூறியுள்ளனர். மும்பை இந்தியன்ஸ் அணியில் நல்ல இளம் வீரர்கள் சரியான சமநிலையில் இருப்பதால் அந்த அணி அடுத்த ஆண்டும் இதே செயல்பாட்டை வெளிப்படுத்த முடியும் என விமர்சகர்கள் கூறியுள்ள நிலையில் தான் அந்த அணிக்கு தற்போது புது சிக்கல் எழுந்துள்ளது. அதாவது அடுத்த சீசனுக்கு முன் நடக்கவுள்ள மெகா ஏலத்தால் மும்பை அணி அதன் இளம் வீரர்களை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
2020 ஐபிஎல் தொடர் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளதால், 2021 ஐபிஎல் தொடரை மிகவும் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு வரும் பிசிசிஐ ஒன்பதாவதாக ஒரு அணியையும் சேர்க்க உள்ளது. அப்படி புதிய அணியை சேர்த்தால் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஐபிஎல் மெகா ஏலத்தை நடத்தியே ஆக வேண்டும் என்ற சூழலில், அந்த ஏலத்துக்கு முன் ஐபிஎல் அணிகள் சில வீரர்களை மட்டுமே தக்க வைத்து மற்ற வீரர்களை ஏலத்தில் விட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதை சமாளிக்க மும்பை இந்தியன்ஸ் அணி அதன் மிக முக்கிய வீரர்களான ரோஹித் சர்மா, பும்ரா, ஹர்திக் பாண்டியா, பொல்லார்டு ஆகியோரை தக்க வைத்து ஏலம் முடிந்த பின் ரீட்டெயின் செய்து வாங்கி விடும். அத்துடன் மற்ற வீரர்களை அப்படியே மீண்டும் எடுக்க சிஎஸ்கே அணியின் 2018 மெகா ஏல திட்டத்தை பின்பற்றலாமென கூறப்படுகிறது. அதாவது முன்னதாக சிஎஸ்கே அணி இரண்டு ஆண்டு தடைக்கு பின் மீண்டும் வந்து தங்களின் பழைய வீரர்களை எத்தனை கோடி ஆனாலும் பரவாயில்லையென வாங்கியது. அதே திட்டத்தை அடுத்து வரும் தொடருக்கான ஏலத்தில் மும்பை அணியும் செயல்படுத்தக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2021 ஐபிஎல் தொடரில் ஒன்பதாவது அணி அறிமுகப்படுத்தப்பட்டால் ஏலத்தில் ஒவ்வொரு சிறந்த வீரருக்கும் கடும் போட்டி இருக்கும் என்பதுடன், மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் நல்ல பார்மில் இருப்பதால் அவர்களை இழுக்க மற்ற அணிகள் கடுமையாக மோதும் என்பது குறிப்பிடத்தக்கது. இதையெல்லாம் மீறி சிஎஸ்கே அணியைப் போல மும்பை அணி அதன் சிறந்த வீரர்களை அப்படியே தக்க வைத்தால் அந்த அணி பலமான அணியாகவே தொடர்ந்து அடுத்த ஆண்டு தொடரையும் வெல்லும் வாய்ப்பு கிடைக்கும்.
மற்ற செய்திகள்