திடீரென வைரலாகும் ரோஹித் ஷர்மாவின் ‘9 வருட’ பழைய ட்வீட்.. அப்படி என்ன சொல்லியிருக்காரு..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் டி20 கேப்டன் ரோஹித் ஷர்மா 9 ஆண்டுகளுக்கு முன்பு பதிவிட்ட ட்வீட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்து. இதன் இறுதிப்போட்டியில் நியூஸிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா கோப்பையை கைப்பற்றியது. இந்த தொடரில் சூப்பர் 12 சுற்றுடன் இந்தியா வெளியேறியது. முன்னதாக டி20 உலகக்கோப்பை தொடருடன், இந்திய டி20 அணிக்கான கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி (Virat Kohli) விலகுவதாக அறிவித்திருந்தார். இதனை அடுத்து தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா (Rohit Sharma), இந்திய டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இந்த சூழலில் நியூஸிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுபயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதன் முதல் டி20 போட்டி இன்று (17.11.2021) ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெறுகிறது. ரோஹித் ஷர்மா கேப்டனாக எதிர்கொள்ளும் முதல் டி20 தொடர் இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், ரோஹித் ஷர்மாவின் பழைய ட்வீட் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், கடந்த 2012-ம் ஆண்டு ரஞ்சி டிராபி தொடரில் ரோஹித் ஷர்மா விளையாடினார். அப்போது மும்பை அணிக்கு கேப்டனாக அவர் நியமிக்கப்பட்டிருந்தார். இதுகுறித்து அப்போது ட்வீட் செய்திருந்த ரோஹித் ஷர்மா, ‘ஜெய்ப்பூருக்கு வந்துவிட்டோம். ஆமாம் இந்தமுறை நான் அணியை வழி நடத்துகிறேன். புதிய பொறுப்பை எதிர்நோக்கி காத்துள்ளேன்’ என பதிவிட்டிருந்தார்.
Touched down in jaipur and yes I will be leading the side, looking forward to the added responsibility :)
— Rohit Sharma (@ImRo45) November 7, 2012
ரோஹித் ஷர்மா 9 வருடங்களுக்கு முன்பு பதிவிட்டதுபோல, தற்போது இந்திய டி20 அணிக்கு கேப்டனாக இன்று தனது முதல் போட்டியை எதிர்கொள்கிறார். அதுவும் அதே ஜெய்ப்பூர் மைதானத்தில் என்பதால், ரசிகர்கள் இந்த ட்வீட்டை தற்போது ரீ-ட்வீட் செய்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்