‘இந்திய அணி நிர்வாகம்’... ‘எந்த ஆர்டரில் இறக்கினாலும் சரி’... ‘பேட்டிங் செய்ய தயார்’... ‘அதிரடியாக கூறிய சீனியர் வீரர்’...!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் எந்த வரிசையிலும் பேட்டிங் செய்ய தயாராக இருப்பதாக இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா கூறியுள்ளார்.
இடது காலில் தசைநாரில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு உடல்தகுதியை நிரூபிப்பதற்காக பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் ரோகித் சர்மா பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, ‘ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பேட்டிங்கில் நான் எந்த வரிசையில் விளையாடுவதற்கு அணி நிர்வாகம் விரும்பினாலும் அந்த வரிசையில் மகிழ்ச்சியோடு பேட்டிங் செய்வேன் என்பதை தெளிவாக சொல்லிக்கொள்கிறேன்.
ஆனால் தொடக்க வரிசை பேட்டிங்கில் இருந்து மாற்றப்படுவேனா என்பது எனக்கு தெரியாது. இந்திய வீரர்கள் அனைவரும் ஏற்கனவே ஆஸ்திரேலியா சென்று விட்டதால், அணியின் இன்னிங்சை தொடங்கப்போவது யார்?, விராட் கோலி சென்ற பிறகு அந்த வரிசையில் யாரை ஆட வைக்கலாம் என்பதை கட்டாயம் முடிவு செய்திருப்பார்கள். நான் ஆஸ்திரேலியாவுக்கு சென்றதும், அனேகமாக எல்லாமே எனக்கு தெளிவாகி விடும்.
என்னை பொறுத்தவரை எந்த வரிசையில் பேட்டிங் செய்தாலும் எனக்கு பிரச்சினை இல்லை. இப்போதெல்லாம் தொடக்க ஆட்டக்காரராக இறங்கும் போது ‘கட்’ அல்லது ‘புல்ஷாட்’ அடிப்பது குறித்து மட்டும் சிந்திப்பதில்லை. முடிந்தவரைக்கும் நேர்பகுதியில் பந்தை விரட்டுவதிலும் கவனம் செலுத்துகிறேன்.
சர்வதேச கிரிக்கெட்டில் எந்தவடிவிலான போட்டியும் எளிதானது அல்ல. அதிலும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி ஓராண்டுக்கு மேல் ஆகி விட்டதால் இது கடும் சவாலாக இருக்கப்போகிறது. அது பற்றி அளவுக்கு அதிகமாக யோசிக்காமல் சிவப்பு பந்து கிரிக்கெட்டில் அடிப்படை விஷயங்களில் கவனம் செலுத்துவேன்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, அடுத்த 3-4 நாட்களில், ரோகித் சர்மா மற்றும் இஷாந்த் சர்மா ஆஸ்திரேலியா வரவில்லையென்றால், டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது கடினமாகிவிடும் என இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்