எல்லாரும் கேட்ட ஒரே கேள்வி.. ஏன் ரிஷப் பந்த் தொடக்க வீரராக விளையாடுனார்..? கேப்டன் ரோகித் விளக்கம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் ரிஷப் பந்தை தொடக்க வீரராக களமிறங்கியது குறித்து கேப்டன் ரோகித் சர்மா விளக்கம் அளித்துள்ளார்.
ஒருநாள் போட்டி
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 237 ரன்களை எடுத்தது.
அசத்தல் ஜோடி
அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 64 ரன்களும், கே.எல்.ராகுல் 49 ரன்களும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணியைப் பொறுத்தவரை அல்ஜாரி ஜோசப், ஓடியன் சுமித் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், கேமர் ரோச், ஹோல்டர், ஹூசைன், பேபியன் ஆலம் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இந்தியா வெற்றி
இதனைத் தொடர்ந்து 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடியது. ஆனால் இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 46 ஓவர்களில் 193 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதனால் 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை இந்தியா தக்க வைத்துள்ளது.
தொடக்க ஆட்டக்காரர் ரிஷப் பந்த்
நேற்றைய போட்டியில் ரோகித் சர்மாவுடன் யாரும் எதிர்பார்க்காத வகையில் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் தொடக்க வீரராக களமிறங்கினார். மிடில் ஆர்டரில் விளையாடும் ரிஷப் பந்த் 34 பந்துகளை எதிர்கொண்டு 18 ரன்களே எடுத்து ஆட்டமிழந்தார். இதேபோல ரோகித் சர்மாவும் 5 ரன்னில் ஆட்டமிழந்தார்.
விமர்சனம்
வழக்கமாக தொடக்க வீரராக களமிறங்கும் ஷிகர் தவான் உடல் தகுதியுடன் இல்லை. மயங்க் அகர்வால் தொடக்க வரிசையில் ஆடக்கூடியவர். இதேபோல 4-வது வரிசையில் களம் இறங்கிய கே.எல்.ராகுலும் தொடக்க வீரராக ஆடக்கூடியவர்தான். இந்த போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று விட்டதால் தொடக்க வீரர் வரிசை குறித்து விவாதிக்கப்படவில்லை. ஆனாலும் முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சனம் செய்திருந்தனர்.
ரோகித் சர்மா விளக்கம்
இந்த நிலையில் ரிஷப் பந்தை தொடக்க வீரரராக களமிறக்கியது குறித்து கேப்டன் ரோகித் சர்மா விளக்கம் அளித்துள்ளார். அதில், ‘மாறுபட்ட முறையில் சிந்தனை செய்து ரிஷப் பந்தை தொடக்கவீரராக களமிறக்கப்பட்டார். இதை அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றிருப்பார்கள். இது தற்காலிக முயற்சியே தவிர, நிரந்தரமானது அல்ல. அடுத்த போட்டியில் ஷிகர் தவான் விளையாடுவார். ஒரே ஒரு போட்டிக்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது’ என ரோகித் சர்மாக கூறினார்.
அசத்திய இளம் பந்துவீச்சாளர்
தொடர்ந்து பேசிய அவர், ‘வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரை கைப்பற்றியதை சிறந்த உணர்வாக கருதுகிறேன். அவர்கள் சில வகைகளில் சவால் கொடுத்தனர். கே.எல்.ராகுலும், சூர்யகுமார் யாதவும் நல்ல பார்ட்னர்ஷிப்பை கொடுத்தனர். இருவரிடமும் நல்ல அனுபவ ஆட்டம் தெரிந்தது. அனைத்து பந்துவீச்சாளர்களும் சிறப்பாக பந்து வீசினார்கள். பிரஷித் கிருஷ்ணாவின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது. இப்படி ஒரு அபாரமான பந்துவீச்சை நான் பார்த்ததில்லை. 6-வது பந்து வீச்சாளராக தீபக் கூடா பயன்படுத்தப்பட்டார். எப்போதுமே பந்துவீச்சாளர்களை சுழற்சி முறையில் பயன்படுத்துவது அவசியமானது’ என ரோகித் சர்மா கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்