அப்போ கோலி முன்னாடியே இதை சொல்லலையா..? Instagram-ல் ரோஹித் பதிவிட்ட அந்த வார்த்தை.. கேள்வி எழுப்பும் ரசிகர்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி விலகியதை அடுத்து ரோஹித் ஷர்மா இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ஒரு பதிவு ரசிகர்களிடையே கேள்வியை எழுப்பியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 2-1 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அணி தொடரை கைப்பற்றியது.
இந்த சூழலில் நேற்று முன்தினம் திடீரென டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கான இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
முன்னதாக டி20 உலகக்கோப்பை தொடர் முடிவடைந்ததும் டி20 அணிக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி விலகினார். இதனை அடுத்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே கேப்டனாக செயல்பட்டு வந்தார். இதனிடையே திடீரென ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்டு ரோஹித் ஷர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதனால் பிசிசிஐ மீது கடுமையான விமர்சனங்களை ரசிகர்கள் வைத்தனர்.
இந்த நிலையில் டெஸ்ட் அணிக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி விலகியது குறித்து ரோஹித் ஷர்மா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில், ‘அதிர்ச்சியாக உள்ளது. ஆனாலும் இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி சிறப்பாக செயல்பட்டார். அவரது அடுத்த நகர்வுகளுக்கு வாழ்த்துக்கள்’ என ரோஹித் ஷர்மா குறிப்பிட்டிருந்தார்.
விராட் கோலி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியது அதிர்ச்சியளிப்பதாக ரோஹித் ஷர்மா குறிப்பிட்டதால், முன்பே விராட் கோலி இதனை ரோஹித் ஷர்மாவிடம் தெரிவிக்கவில்லையா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், இப்போதும் இருவரிடையே பனிப்போர் நிலவி வருவதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்