மீட்டிங்கில் ‘அஸ்வின்’ பெயரை முதல்ல சொன்னதே அவர்தான்.. கசிந்த தகவல்.. அஸ்வினுக்காக ‘குரல்’ கொடுத்த அந்த வீரர் யார் தெரியுமா..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அஸ்வின் பெயரை பரிந்துரைத்த வீரர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் மாதம் ஐக்கிய அரபு அமீரத்தில் தொடங்குகிறது. இதற்கான வீரர்களின் பட்டியலை ஒவ்வொரு நாடும் அறிவித்து வருகிறது. அந்தவகையில் கடந்த புதன்கிழமை டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட உள்ள இந்திய வீரர்களின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டது. இதில் தமிழக சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
அதில் அஸ்வின், 4 வருடங்களுக்கு பிறகு லிமிடெட் ஓவருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். கடைசியாக 2017-ம் ஆண்டு நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் அவர் விளையாடி இருந்தார். அதன்பின்னர் இளம் வீரர்களின் வருகையால் தொடர்ந்து அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது. இதனிடையே ஐபிஎல் தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது திறமையை நிரூபித்தார்.
அஸ்வின் தேர்வு குறித்து விளக்கமளித்த தேர்வுக்குழு தலைவர் சேத்தன் ஷர்மா, ‘ஐபிஎல் தொடரில் அஸ்வின் சிறப்பாக விளையாடி வருகிறார். ஐக்கிய அரபு அமீரக மைதானங்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். குறிப்பாக ஆஃப் ஸ்பின் பவுலிங்கிற்கு நன்றாக ஒத்துழைக்கும். இந்திய அணியில் இருக்கும் சிறந்த ஆஃப் ஸ்பின் பவுலர் அஸ்வின் தான். அதனால்தான் அவரை அணியில் எடுத்துள்ளோம்’ என விளக்கமளித்தார்.
இந்த நிலையில் டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணியில் அஸ்வின் இடம்பெற துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா முக்கிய காரணமாக இருந்துள்ளார். டி20 உலகக்கோப்பைக்கான வீரர்கள் தேர்வு தொடர்பாக நடந்த மீட்டிங்கில், அஸ்வின் குறித்து முதன்முதலாக ரோஹித் ஷர்மா தான் பேச்சு எடுத்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் அவரது ஓவரை அடிப்பது எவ்வளவு கடினமாக இருந்தது என கூறியுள்ளார். கேப்டன் கோலியும் இதை ஆதரிக்கவே அஸ்வின் அணியில் இடம்பெற்றுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்