‘வார்ம் அப் மேட்சே முடிஞ்சு போச்சு’.. பாண்ட்யா ‘பவுலிங்’ போடுவாரா..? மாட்டாரா..? ரோஹித் ஷர்மா கொடுத்த முக்கிய அப்டேட்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் ஆல்ரவுண்டர் பவுலிங் வீசுவது தொடர்பாக ரோஹித் ஷர்மா விளக்கம் கொடுத்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை (T20 World Cup) தொடரின் தகுதிச்சுற்று போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகள் பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகின்றன.
இதில் கடந்த திங்கள்கிழமை நடந்த இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதனை அடுத்து நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து இந்தியா விளையாடியது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு152 ரன்களை எடுத்தது. இதனைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி, 17.5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 153 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
இப்போட்டியில் விராட் கோலிக்கு (Virat Kohli) ஓய்வு கொடுக்கப்பட்டது. அதனால் ரோஹித் ஷர்மா (Rohit Sharma) கேப்டனாக இருந்து அணியை வழி நடத்தினார். அப்போது டாஸ் போட்டு முடிந்ததும், இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா (Hardik Pandya) பவுலிங் செய்வது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த ரோஹித் ஷர்மா, ‘இந்திய அணியில் 6-வதாக ஒரு பவுலர் நிச்சயம் தேவை. ஏனென்றால் ஏதாவது ஒரு போட்டி பவுலர்களுக்கு மோசமாக அமையும் போது, 6-வது பவுலர் பெரிய அளவில் உதவுவார். தற்போது ஹர்திக் பாண்ட்யா பந்து வீசவில்லை. ஆனால் அதற்காக அவர் தயாராகி வருகிறார். ஏன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீசவில்லை என அதிக கேள்விகள் எழுகின்றன. அதனால் டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்கும்போது நிச்சயம் அவர் பவுலிங் செய்ய ஆரம்பித்து விடுவார்’ என ரோஹித் ஷர்மா கூறியுள்ளார்.
கடந்த 2018-ம் ஆண்டு முதுப்பகுதியில் ஏற்பட்ட காயத்துக்கு ஹர்திக் பாண்ட்யா அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அதன்பின்னர் பவுலிங் செய்வதை அவர் குறைத்துக்கொண்டார். நடந்த முடிந்த ஐபிஎல் தொடரில் கூட ஹர்திக் பாண்ட்யா பவுலிங் செய்யவில்லை. இந்த சூழலில் நேற்றைய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விராட் கோலியை பவுலிங் செய்ய வைத்து ரோஹித் ஷர்மா பரிசோதனை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்