‘தோனியின் மாஸ் சாதனையை சமன் செய்த ரோஹித் ஷர்மா’.. ‘கோலி கூட இன்னும் அத பண்ணல’ அது என்ன தெரியுமா..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் விளையாடியதன் மூலம் தோனியின் சாதனையை ரோஹித் ஷர்மா சமன் செய்துள்ளார்.
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு இடையேயான கடைசி டி20 போட்டி நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான் மற்றும் ரோஹித் ஷர்மா களமிறங்கினர். இதில் ரோஹித் ஷர்மா 9 ரன்னில் அவுட்டாக, அடுத்து வந்த கேப்டன் விராட் கோலியும் 9 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். இதனை அடுத்து களமிறங்கிய வீரர்கள் வந்த வேகத்தில் அடுத்தடுத்து அவுட்டாக 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களை இந்தியா எடுத்தது. அதிகபட்சமாக ஷிகர் தவான் 36 ரன்கள் எடுத்தார்.
இதனை அடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 16.5 ஓவர்களில் 140 ரன்கள் அடித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில் தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன் டி காக் 79 ரன்கள் அடித்து அணியின் வெற்றி வழிவகுத்தார். இதன்மூலம் 1-1 என்ற கணக்கில் டி20 தொடரை தென் ஆப்பிரிக்க அணி சமன் செய்தது. இப்போட்டியில் விளையாடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா, தோனியின் சாதனையை சமன் செய்தார். ரோஹித் ஷர்மா தனது 98 -வது டி20 போட்டியில் நேற்று களமிறங்கினார். இதன்மூலம் அதிக டி20 போட்டியில் விளையாடிய இந்திய வீரர் என்ற பெருமையை தோனியுடன் (98 போட்டிகள்) பகிர்ந்து கொண்டார்.
இந்த பட்டியலில் சுரேஷ் ரெய்னா (78 போட்டிகள்), விராட் கோலி (72 போட்டிகள்) அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். இதில் பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக் 111 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி முதல் இடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் பாகிஸ்தான் வீரர் ஷாகித் அப்ரிதி (99 போட்டிகள்) உள்ளார்.