"அப்டியே என்னோட 'பேட்டிங்' பாத்த மாதிரி இருக்கு.. 'கிரிக்கெட்'ல அடுத்த சூப்பர்ஸ்டார் 'பையன்' தான் போல.. மெய்சிலிர்த்து போன 'சேவாக்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளிடையேயான கிரிக்கெட் தொடர் நடந்து முடிந்துள்ள நிலையில், அனைத்து இந்திய வீரர்களும், அடுத்ததாக ஐபிஎல் போட்டிகளுக்காக தயாராகி வருகின்றனர்.
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், கடந்த ஆஸ்திரேலிய தொடரில் இருந்தே சிறப்பான ஃபார்மில் உள்ளதால், ஐபிஎல் தொடரிலும் அவர் மீதான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அது மட்டுமில்லாமல், அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும், மிக அதிரடியுடன் ஆடி, தனக்கான ஒரு புது ஸ்டைலையும் கடைபிடித்து வருகிறார்.
வரும் காலங்களில், இந்திய அணியின் நட்சத்திர வீரராகவும் ரிஷப் பண்ட் இருப்பார் என மைக்கேல் வாகன், இன்சமாம் உல் ஹக், இயான் பெல் உள்ளிட்ட பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அவரை பாராட்டியும் வருகின்றனர். இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் வீரேந்தர் சேவாக் (Virender Sehwag), ரிஷப் பண்டடை வேற லெவலில் பாராட்டித் தள்ளியுள்ளார்.
'இங்கிலாந்து தொடருக்குப் பிறகு, இந்திய அணிக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய பாசிட்டிவ் என்னவென்றால், ரிஷப் பண்ட் தான். ஏனென்றால், ஒரு நாள் போட்டிகளில், மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்ய அவர் வரும் போது, அதன் பிறகு கிடைக்கும் பேட்டிங் பவர்பிளேவை திறம்பட பயன்படுத்துகிறார்.
அவர் இந்திய அணியில் தொடர்ந்து நீடிப்பது தான் முக்கியம் என நான் கருதுகிறேன். அவரது ஆட்டம், என்னுடைய ஆரம்ப நாட்களை நினைவுபடுத்துகிறது.
மற்றவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பது பற்றி, அவர் கொஞ்சம் கூட யோசிக்கவில்லை. தன்னுடைய விருப்பப்படி, பேட்டிங் செய்கிறார். ஆனால், ஒன்றிரண்டு விஷயங்களை அவர் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.
மிடில் ஆர்டரில் களமிறங்கும் போது, 50 ஓவர்கள் வரை அவுட்டாகாமல் பேட்டிங் செய்யவும், தான் அடிக்கும் 70, 80 ரன்களை 100 ஆக மாற்றவும் அவர் கற்றுக் கொள்ள வேண்டும். அதனை மட்டும் அவர் செய்து விட்டால், கிரிக்கெட் உலகின் அடுத்த சூப்பர் ஸ்டார் அவர் தான்.
ஐபிஎல் போட்டிகளில், அவரால் ரன் அடிக்க முடியாமல் போன போது, தனது பேட்டிங்கில் சில திருத்தங்களை செய்து கொண்டு, டெஸ்ட் போட்டிகளில் ரன்களை குவிக்கத் தொடங்கினார். அதைப் போல, டி 20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில், கடைசி வரை களத்தில் நின்று, என்னைப் போன்ற ஆட்டத் திறனை வெளிப்படுத்தினால் போதும்' என சேவாக் ஆலோசனை வழங்கி ரிஷப் பண்ட்டிற்கு, புகழாரமும் சூட்டியுள்ளார்.
மற்ற செய்திகள்