கார் ஓட்டும் போது தூங்கிய ரிஷப் பண்ட்?.. விபத்து குறித்த முதல் கட்ட விசாரணையில் போலீசார் தகவல்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கியது தொடர்பாக ஹரித்வார் போலீஸ் அதிகாரி எஸ்.கே. சிங் பத்திரிகையாளர் சந்திப்பில் சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.
உத்தரகண்ட் மாநிலம் ரூர்க்கி அருகே இன்று வெள்ளிக்கிழமை அதிகாலையில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட், கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்,
விபத்தில் பலத்த காயமடைந்த அவர் உடனடி சிகிச்சைக்கு சக்ஷாம் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் உயர் சிகிச்சைக்கு டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
ரிஷப் பண்ட் உடல் நிலை குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த மாதம் பங்களாதேஷுக்கு எதிரான தொடரை 2-0 என கைப்பற்றிய இந்திய டெஸ்ட் அணியில் பந்த் இடம்பெற்றிருந்தார். அடுத்த மாதம் இலங்கைக்கு எதிரான போட்டிகளுக்கான இருபது20 மற்றும் ஒருநாள் அணியில் அவர் காயம் காரணமாக இடம் பெறவில்லை.
புத்தாண்டுக்கு முன்னதாக தனது தாயை ஆச்சரியப்படுத்த ரிஷப் பந்த் பயணம் செய்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹர்த்வார் மாவட்டத்தின் மங்களூர் நகரில் உள்ள முகமதுபூர் ஜாட் என்ற இடத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி எஸ்.கே.சிங் அளித்துள்ள பேட்டியில், "அதிகாலை 5.30 மணியளவில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்தின் கார் விபத்துக்குள்ளானதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. அவர் ரூர்க்கியில் உள்ள சக்ஷாம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், பின்னர் அவர் டேராடூனுக்கு மாற்றப்பட்டார். அவர் காரை தனியாக ஓட்டிக் கொண்டு வந்துள்ளார்.
ரிஷப், தனது உறவினர்களை சந்திப்பதற்காக ரூர்க்கிக்கு சென்று கொண்டிருந்தார். ரூர்க்கியை நோக்கி நர்சனுக்கு 1 கிலோமீட்டர் முன்னால் அவர் தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டது" என எஸ்.கே.சிங், ஹரித்வார் மாவட்ட கிராம எஸ்.பி கூறியுள்ளார்.
இடது கை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இதுவரை 33 டெஸ்ட் போட்டிகளில் 5 சதங்கள் மற்றும் 11 அரை சதங்களுடன் 2,271 ரன்கள் எடுத்துள்ளார். அவர் 30 ODI மற்றும் 66 T20I போட்டிகளில் முறையே 865 மற்றும் 987 ரன்கள் எடுத்துள்ளார்.
மற்ற செய்திகள்