“விளையாடலைனாலும் பரவால்ல.. எங்க பக்கத்துல இருங்க”.. ரிஷப் பண்ட்-க்கு உருக்கமான கோரிக்கை வைத்த ரிக்கி பாண்டிங்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடெல்லி கேபிட்டல்ஸ் அணியின் பயிற்சியாளரும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனுமான ரிக்கி பாண்டிங், ரிஷப் பண்ட் குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ஆக வலம் வருபவர் ரிஷப் பண்ட். இடது கை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இதுவரை 33 டெஸ்ட் போட்டிகளில் 5 சதங்கள் மற்றும் 11 அரை சதங்களுடன் 2,271 ரன்கள் எடுத்துள்ளார். அவர் 30 ODI மற்றும் 66 T20I போட்டிகளில் முறையே 865 மற்றும் 987 ரன்கள் எடுத்துள்ளார். சமீபத்தில் வங்க தேச கிரிக்கெட் அணிக்கு எதிரான தொடரில் ஆடி இருந்தார். ஐபிஎல் தொடரை பொறுத்தவரையில் டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்டுவந்தவர் பண்ட்.
இதனிடையே கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி உத்தரகண்ட் மாநிலம் ரூர்க்கி அருகே பண்ட், கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்தின் காரணமாக அவருக்கு முழங்காலில் தசைநார் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இதனால் பண்ட் மீண்டும் இந்திய அணியில் இணைய மாதக்கணக்கில் காலம் ஆகலாம் என கிரிக்கெட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. அதேநேரத்தில் பண்ட் வரும் ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார் என அணி நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்த சூழ்நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், ரிஷப் பண்ட் குறித்து உருக்கமாக பேசியுள்ளார். அப்போது அவர்,"சில தினங்களுக்கு முன்னர் நான் அவரிடம் பேசினேன். அவரை தெரிந்த அனைவரும் அவரை நேசிக்கின்றனர். முழு குணமடைந்து அவர் மீண்டும் அணிக்கு திரும்புவார் என நம்புகிறோம். அவர் விளையாடாவிட்டாலும் எங்களுடன் அவர் டக்கவுட்டில் இருக்கவேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். ஒரு கேப்டனாக அவருடைய செயல்பாடுகள் அணிக்கு தேவை. மார்ச் மாதம் துவங்கவுள்ள டெல்லி அணியின் பயிற்சி முகாமில் அவர் என்னுடன் இருக்கவேண்டும் என விரும்புகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்