அந்த ‘ரெண்டு’ பேர்ல ஒருத்தருக்குதான் இடம்.. என்ன முடிவு எடுப்பார் ‘தல’ தோனி..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் விளையாட உள்ள சிஎஸ்கே வீரர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
14-வது சீசன் ஐபிஎல் (IPL) தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 5-ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தில் இருந்து வருகிறது. இந்த நிலையில், இன்று (24.09.2021) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியை எதிர்த்து சென்னை அணி விளையாட உள்ளது.
இப்போட்டியில் விளையாட உள்ள சிஎஸ்கே வீரர்கள் குறித்து ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது சாம் கர்ரனின் (Sam Curran) தனிமைப்படுத்துதல் காலம் முடிந்துள்ளதால், இன்றைய போட்டியில் அவர் விளையாட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஆனால் முன்னதாக நடந்த மும்பை அணிக்கு எதிரான ஜோஸ் ஹசில்வுட் (Josh Hazlewood) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக மும்பை அணியின் ஆல்ரவுண்டர் பொல்லார்டின் விக்கெட்டை வீழ்த்தி ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். அதனால் ஹசில்வுட்டுக்கு பதிலாக சாம் கர்ரனை தேர்ந்தெடுப்பது சந்தேகம் தான் என சொல்லப்படுகிறது.
அதேபோல் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் காயமடைந்த அம்பட்டி ராயுடு, பாதியிலேயே ஆட்டத்தில் இருந்து வெளியேறினார். அதனால் இன்றைய பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடுவாரா? என ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்தது.
இதுகுறித்து அப்போதே விளக்கமளித்த தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங், அம்பட்டி ராயுடுவுக்கு மேற்கொள்ளப்பட்ட எக்ஸ்-ரே பரிசோதனையில் எலும்பு முறிவு போன்ற பெரிய காயம் ஏதும் ஏற்படவில்லை. அதனால் சில நாட்கள் ஓய்வுக்கு பின் அணியில் இணைவார் என்றும், பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடுவார் என்றும் ஸ்டீபன் பிளெமிங் கூறியது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக அபுதாபி மைதானத்தில் நடைபெற்ற கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி மோசமான தோல்வியை சந்தித்தது. குறிப்பாக 92 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதனால் இன்றைய சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற முனைப்பு காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற செய்திகள்