“இது சும்மா வெறும் ப்ரேக் தான்.. அடுத்த வருசம் பாருங்க”.. கோலி குறித்து அஸ்வின் சொன்ன சீக்ரெட்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபெங்களூரு அணிக்கு விராட் கோலி மீண்டும் கேப்டனாக வாய்ப்பு உள்ளதாக சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் வரும் 26-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த முறை கோப்பையை கைப்பற்ற வேண்டும் என ஒவ்வொரு அணியும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன. இந்த தடவை குஜராத், லக்னோ என 2 புதிய அணிகள் இணைந்துள்ளதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பல வீரர்கள் வெவ்வேறு அணிகளுக்கு சென்றுள்ளனர். அதில் சென்னை அணியில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா வீரர் டு பிளிசிஸ் பெங்களூரு அணி ஏலத்தில் எடுக்கப்பட்டார். தற்போது அவர் அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடருடன் பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி விலகினார். இவர் தலைமையிலான பெங்களூரு அணி ஒரு முறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்லவில்லை. இதனால் அவர் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இதன் காரணமாகவே விராட் கோலி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியதாக தெரிகிறது.
இந்த நிலையில் பெங்களூரு அணிக்கு விராட் கோலி மீண்டும் கேப்டனாக வாய்ப்பு உள்ளதாக இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தெரிவித்துள்ளார். அதில், ‘ஒரு கேப்டனாக கடந்த சில ஆண்டுகளாக விராட் கோலி மிகப்பெரிய விமர்சனங்களுக்கு உள்ளாகி இருந்தார். அதனால் மனதளவில் அவர் பாதிப்படைந்து இருப்பதாக நான் நினைக்கிறேன். இந்த ஆண்டு அவருக்கு ஒரு தற்காலிக ஓய்வு இடைவெளி போன்றது. அடுத்த ஆண்டே கூட அவர் மீண்டும் பெங்களூரு அணியின் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்றே எனக்கு தோன்றுகிறது’ என அஸ்வின் தெரிவித்துள்ளார்.
அதேபோல் டு பிளசிஸ் குறித்தும் அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘கிரிக்கெட் வாழ்வின் தனது கடைசி ஆண்டுகளில் டு பிளசிஸ் விளையாடி வருகிறார். சொல்லப்போனால் அடுத்த இரண்டு, மூன்று ஆண்டுகள் மட்டுமே அவரால் விளையாட முடியும். ஆனாலும் அவரது அனுபவத்தை கருதி டு பிளசிஸை கேப்டனாக பெங்களூரு அணி நியமித்துள்ளது. உண்மையாகவே இது நல்ல முடிவு. அணி வீரர்கள் அவரிடமிருந்து நிறைய அனுபவங்களை எடுத்துக்கொள்வார்கள். தோனியின் கேப்டன்சி போலவே தமது கேப்டன்ஷி இருக்கும் என அவர் கூறியுள்ளார்’ என அஸ்வின் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்