“சின்ன பையன்.. ஒல்லியா இருக்கான்.. எங்க சிக்ஸ் அடிக்கப் போறான்னு நெனச்சிருப்பாங்க”.. இளம் வீரரை புகழ்ந்து தள்ளிய RCB கேப்டன்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற காரணமாக இருந்த இளம் வீரர் ஒருவரை பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளசிஸ் புகழ்ந்து பேசியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் நேற்றைய 13-வது லீக் போட்டியில் டு பிளசிஸ் தலைமையான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில் 169 ரன்களை எடுத்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த பெங்களூரு அணி 19.1 ஓவர்களில் 173 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக அந்த அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் 44 ரன்களும், சபாஷ் அகமது 45 ரன்களும் எடுத்தனர்.
இந்த நிலையில் போட்டி முடிந்த பின் பேசிய பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளசிஸ், ‘இப்போட்டியில் தினேஷ் கார்த்திக் விளையாடிய விதம் மிகவும் அற்புதமாக இருந்தது. இக்கட்டான வேளையில் அமைதியாக இருந்து அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் எங்கள் அணிக்கு ஒரு முக்கியமான வீரர் என்றே நான் கூறுவேன். அதுமட்டுமின்றி இந்த போட்டியில் நாங்கள் சிறப்பாகவே பந்து வீசினோம். ஆனால் கடைசி கட்டத்தில் ஜாஸ் பட்லர் சில நல்ல ஷாட்களை விளையாடி ரன் குவித்து விட்டார். ஆனாலும் அந்த இலக்கினை நாங்கள் வெற்றிகாரமாக துரத்தியதில் மகிழ்ச்சி.
வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தபோது, தினேஷ் கார்த்திக் மற்றும் சபாஷ் அகமது சிறப்பான பாட்னர்ஷிப் அமைத்தனர். அதிலும் குறிப்பாக சபாஷ் அகமதுவை நிறைய பேர் சந்தேகப்பட்டனர். சின்னப் பையனாக ஒல்லியாக இருக்கும் அவரால் சிக்ஸ் அடிக்க முடியுமா என்றெல்லாம் நினைத்து இருப்பார்கள். ஆனால் சபாஷ் அகமது மிகப்பெரிய சிக்சர்களை இந்த போட்டியில் விளாசினார். அவருடைய அதிரடி ஆட்டம் இந்த போட்டியில் சிறப்பாக இருந்தது.
பந்து வீச்சாளரான சபாஷ் அகமதுவை, நாங்கள் இப்போட்டியில் பவுலிங்கின் போது பயன்படுத்தவில்லை. அதற்கு காரணம் மைதானம் சற்று ஈரமாக இருந்ததால், அவரால் பந்தை கிரிப் செய்து வீச முடியாது. ஆனால் பேட்டிங்கின் போது அவரது திறமை என்ன என்பதை காண்பித்து விட்டார்’ என டு பிளசிஸ் புகழ்ந்து பேசியுள்ளார்.
மற்ற செய்திகள்