சிஎஸ்கே குறித்த சர்ச்சை கேள்வி.. இரண்டே வார்த்தையில் ஜடேஜா சொன்ன பதில்.. "சும்மா நச்சுன்னு சொல்லி சோலி'ய முடிச்சுட்டாரு..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட், தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, ஆரம்பத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும், ரிஷப் பண்ட் - ரவீந்திர ஜடேஜா சிறப்பாக ஆடி ரன் சேர்த்தனர். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 416 ரன்கள் எடுத்திருந்தது. அதிரடியாக ஆடிய ரிஷப் பண்ட் 146 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 106 ரன்களும் எடுத்திருந்தனர்.
இறுதி கட்டத்தை நெருங்கும் டெஸ்ட்
தொடர்ந்து, தங்களின் முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, 284 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. இதன் பின்னர், 132 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்த இந்திய அணி, 245 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதற்கடுத்து, இந்தியா நிர்ணயித்த 378 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடி வரும் இங்கிலாந்து அணி, நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில், 3 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 259 ரன்கள் எடுத்துள்ளது.
ஜோ ரூட் 76 ரன்களுடனும், பேர்ஸ்டோவ் 72 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இன்னும் ஒரு நாள் மட்டுமே மீதமுள்ள நிலையில், இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 119 ரன்கள் தேவை. மறுபக்கம், 7 விக்கெட்டுகளை கடைசி நாளில் எடுத்தால் இந்திய அணியால் வெற்றி பெற முடியும். இதனால், வெற்றி யாருக்கு என்பதை தீர்மானிக்கும் கடைசி நாள் நிச்சயம் விறுவிறுப்பு நிறைந்திருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
சிஎஸ்கே குறித்த கேள்வி
இந்நிலையில், ஜடேஜாவிடம் சிஎஸ்கே அணி குறித்து கேட்கப்பட்ட கேள்வியும், அதற்கு அவர் சொன்ன பதில் குறித்த செய்தியும் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. இந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடர் ஆரம்பவதற்கு முன்பாக, சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டார். ஆனால், அவரது தலைமையில் சிஎஸ்கே அணி தடுமாற, மீண்டும் சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி செயல்பட்டார்.
இறுதியில், காயத்தின் காரணமாக ஜடேஜாவும் ஐபிஎல் தொடரில் இருந்து விலக, சிஎஸ்கே அணி 9 ஆவது இடத்தை பிடித்திருந்தது. இது தொடர்பாக ஜடேஜாவின் கேப்டன்சி மீது அதிக விமர்சனங்கள் எழுந்திருந்தது. தற்போது, டெஸ்ட் போட்டியில் சதமடித்த ஜடேஜாவிடம், பத்திரிக்கையாளர் ஒருவர் சிஎஸ்கேவில் மோசமான கேப்டன்சி மற்றும் பேட்டிங் உள்ளிட்டவற்றால் அதிலிருந்து வலிமையாக திரும்ப வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தீர்களா? என்ற கேள்வி கேட்கப்பட்டது.
ஜடேஜாவின் அசத்தலான பதில்
இதனை மறுத்து பதில் சொன்ன ஜடேஜா, "நிச்சயமாக இல்லை" என கூறினார். தொடர்ந்து, "நடந்தது என்னவோ நடந்து விட்டது. ஐபிஎல் தற்போது என் மனதில் இல்லை. இந்திய அணிக்காக ஆடும் போது, உங்களின் மொத்த கவனமும் இந்திய அணி மீது தான் இருக்க வேண்டும். எனக்கும் அப்படி தான். இந்திய அணிக்காக சிறப்பாக ஆடுவதை விட வேறு திருப்தி எதுவுமில்லை" என ஜடேஜா தெரிவித்துள்ளார்.
மேலும், இங்கிலாந்து மண்ணில் சதமடித்தது மிகவும் சிறப்பாக இருந்தது என்றும் என்றும் ஜடேஜா குறிப்பிட்டிருந்தார்.
மற்ற செய்திகள்