சாம்சன் விஷயத்தில்.. தோனி ஸ்டைலில் ட்ரிக்கா பதில் சொன்ன ஹர்திக்.. அஸ்வின் கொடுத்த வேற லெவல் பாராட்டு!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடி 20 உலக கோப்பைத் தொடரில் அரை இறுதி சுற்று வரை முன்னேறி இருந்த இந்திய கிரிக்கெட் அணி, அடுத்ததாக நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது.
இதில், முதலாவதாக டி 20 தொடர் நடைபெற்றிருந்தது. விராட் கோலி, ரோஹித் ஷர்மா உள்ளிட்ட வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டிருந்ததால் டி 20 இந்திய அணிக்கு கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டிருந்தார்.
3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரின் முதல் போட்டி, மழை காரணமாக கைவிடப்பட்டிருந்த நிலையில், இரண்டாவது போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றிருந்தது.
இதனைத் தொடர்ந்து, மூன்றாவது போட்டியின் இரண்டாவது இன்னிங்சின் போது மழை குறுக்கிட DLS முறைப்படி போட்டி டை என அறிவிக்கப்பட்டிருந்தது. டி 20 தொடரை இந்திய அணி கைப்பற்றி இருந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான ஒரு நாள் தொடரும் தற்போது ஆரம்பமாகி உள்ளது.
ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி, நியூசிலாந்தை எதிர்கொண்டிருந்த நிலையில், முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 307 ரன்கள் என்ற இலக்கை 3 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து எட்டி அபார வெற்றி பெற்றிருந்தது. இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டி, நாளை (26.11.2022) நடைபெற உள்ளது.
இதனிடையே, சஞ்சு சாம்சன் குறித்து ஹர்திக் பாண்டியா சொன்ன கருத்திற்கு ரவிச்சந்திரன் அஸ்வின் சொன்ன பதில் அதிகம் வைரலாகி வருகிறது.
இந்திய அணியின் சிறந்த பேட்மேன்களில் ஒருவராக இருப்பவர் சஞ்சு சாம்சன். நியூசிலாந்து அணிக்கு எதிரான டி 20 தொடரில் சஞ்சு சாம்சன் இடம்பெற்றிருந்தார். ஆனால், டி 20 தொடரில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதுகுறித்து பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர்.
சஞ்சு சாம்சனுக்கு ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறித்து கேப்டனாக செயல்பட்டிருந்த ஹர்திக் பாண்டியா பதில் தெரிவித்திருந்தார். சஞ்சு சாம்சன் ஒரு சிறப்பான வீரர் என்றும், நாங்கள் ஒரு கலவையான முயற்சியை கையாண்டதால் அவரை ஆட வைக்க முடியவில்லை என்றும் தெரிவித்திருந்தார். அதே போல, தனிப்பட்ட முறையில் இப்படி செய்யவில்லை என்பது சஞ்சு சாம்சனுக்கு தெரியும் என்றும் வீரர்களுக்கு ஏதாவது தோன்றினால், தன்னிடம் வந்து வெளிப்படையாக பேசலாம் என்றும் ஹர்திக் பாண்டியா விளக்கம் கொடுத்திருந்தார்.
சஞ்சு சாம்சன் குறித்து ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ள கருத்தை பாராட்டி பேசி இருந்த ரவிச்சந்திரன் அஸ்வின், "அவர் இந்த கருத்தை தல தோனி ஸ்டைலில் சொல்ல விரும்பினாரா என்று தெரியவில்லை. ஏனென்றால் நம் அனைவருக்கும் தோனிக்கு ஹர்திக் எவ்வளவு நெருக்கமானவர் என்பது தெரியும். சமூக வலைத்தளங்களில் மிகவும் டிரெண்டாக இருக்கும் கேள்விக்கு மிகவும் அசத்தலான ஒரு பதில் சொன்ன ஹர்திக்கிற்கு எனது பாராட்டுக்கள் " என ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
டி 20 தொடரில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்காத நிலையில், ஒரு நாள் தொடரின் முதல் போட்டியில் அவர் களமிறங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்