"இதுல ஒரு டீம் தான்பா இந்த தடவ 'சாம்பியன்' ஆகப் போறாங்க.." சூசகமாக 'ரவி சாஸ்திரி' போட்ட 'ட்வீட்'.. கேள்வியை எழுப்பிய 'ரசிகர்கள்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு14 ஆவது ஐபிஎல் தொடர், விறுவிறுப்பான கட்டத்தை எட்டி வரும் நிலையில், இன்றைய போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) ஆகிய அணிகள் மோதி வருகின்றன.
முன்னதாக, டெல்லி மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற போட்டியில், டெல்லி அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய பெங்களூர் அணி, புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்திருந்த பெங்களூர் அணி, டிவில்லியர்ஸ் உதவியுடன் 171 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணியில், ரிஷப் பண்ட் மற்றும் ஹெட்மயர் ஆகியோர் சிறப்பாக ஆடியும், ஒரு ரன்னில் தோல்வியைத் தழுவ நேரிட்டது. இந்நிலையில், இந்த போட்டி குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி (Ravi Shastri) போட்டுள்ள ட்வீட் ஒன்று, அதிகம் கேள்விகளை எழுப்பியுள்ளது.
நேற்றைய போட்டிக்கு மத்தியில், கோலி (Kohli) மற்றும் ரிஷப் பண்ட் (Rishabh Pant) ஆகியோர் இணைந்திருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்த ரவி சாஸ்திரி, 'ஒரு அற்புதமான ஆட்டத்தை நேற்று பார்க்க முடிந்தது. புதிய வெற்றியாளருக்கான விதைகள் விதைக்கப்பட்டுள்ளன' என குறிப்பிட்டிருந்தார். பெங்களூர் மற்றும் டெல்லி ஆகிய இரு அணிகளும் இதுவரை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியதேயில்லை.
இதனால், இந்த இரு அணிகளுள் ஒன்று தான், இந்த முறை கோப்பையை கைப்பற்றி புதிய சாம்பியன் ஆகப் போகிறது என்பதைக் குறிப்பிட்டு தான் ரவி சாஸ்திரி அப்படி ட்வீட் செய்தாரா என்பது போன்ற கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
Brilliant game last night. Seeds being sowed for a potentially new winner to emerge #IPL2021 @IPL pic.twitter.com/A0RKnI0y4S
— Ravi Shastri (@RaviShastriOfc) April 28, 2021
இந்த சீசனில், ஐபிஎல் கோப்பையை எந்த அணி கைப்பற்றும் என பல கிரிக்கெட் நிபுணர்கள் கணித்து வரும் நிலையில், ரவி சாஸ்திரியும் தனது கணிப்பு குறித்து செய்துள்ள ட்வீட் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்