"'தோனி' என்கிட்ட சொன்ன முக்கிய 'அட்வைஸ்'.. அது எந்த அளவுக்கு எனக்கு உதவிச்சு தெரியுமா??.." மனம் திறந்த 'ரஷீத் கான்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான ரஷீத் கான் (Rashid Khan), சர்வதேச போட்டிகள் மட்டுமில்லாது, டி 20 லீக் தொடர்கள் மூலம் கிரிக்கெட் உலகில் அதிக புகழ் பெற்றவர்.
ஐபிஎல், பிக் பேஷ் லீக், பாகிஸ்தான் சூப்பர் லீக் உள்ளிட்ட பல டி 20 தொடர்களில், தனது அசாத்திய சுழற்பந்து வீச்சுத் திறன் மூலம், மிக முக்கியமான இடத்தை ரஷீத் கான் பிடித்துள்ளார். எப்படிப்பட்ட பேட்ஸ்மேனாக இருந்தாலும், தனது பந்தின் மூலம் திணறடிக்கச் செய்யும் ரஷீத் கான், பல பிரபல வீரர்களுடனும் இணைந்து டி 20 போட்டிகளில் ஆடியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஆடி வரும் ரஷீத் கான், அந்த தொடரில் குறைந்த எகானமி கொண்ட பந்து வீச்சாளர்களில் ஒருவர். இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் தலைமையில் ஆட வேண்டும் என்பது தனது கனவு என ரஷீத் கான் தெரிவித்துள்ளார்.
இது பற்றி, யூ டியூப் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரஷீத் கான், 'எம். எஸ். தோனியின் (MS Dhoni) தலைமையில் ஆட வேண்டும் என்பது எனது கனவாக இருக்கிறது. ஏனென்றால், அவரது தலைமையின் கீழ் ஆடும் போது, அதிலிருந்து கிடைக்கும் அனுபவம், எனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும்.
ஒரு பந்து வீச்சாளருக்கு, விக்கெட் கீப்பரின் பங்கு, மிகவும் தேவையான ஒன்று. அந்த வகையில், தோனியை விட சிறந்த விக்கெட் கீப்பர் யாருமில்லை. ஒவ்வொரு முறையும் எங்களது போட்டி முடிந்த பின்னர், நான் அவருடன் அதிக நேரம் உரையாடுவேன். அவரிடம் இருந்து கிடைக்கும் அறிவுரை, எனக்கு பெரிதும் உதவியுள்ளது.
கடைசியாக அவருடன் பேசும் போது, தோனி என்னிடம் கூறியது, "ஃபீல்டிங் செய்யும் போது, நீ மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். தேவையில்லாத நேரத்தில் கூட, நீ சிரமப்பட்டு பந்தைப் பிடிக்கிறாய். இங்கு ஒரே ஒரு ரஷீத் கான் தான் உள்ளார். மக்கள் உனது ஆட்டத்தைக் காண காத்திருக்கின்றனர். அப்படி இருக்கும் போது, உனக்கு காயம் ஏற்பட்டால், என்னவாகும்?. அதனால், இதனை நன்றாக மனதில் வைத்துக் கொள். நான் ஜடேஜாவிற்கும் இதே அறிவுரையைத் தான் வழங்கியுள்ளேன்"' என தன்னிடம் தோனி தெரிவித்ததாக ரஷீத் கான் குறிப்பிட்டார்.
மற்ற செய்திகள்