முதல் பந்தில் அவுட்.. அப்செட்டில் இருந்த புஜாரா.. ரியாக்ட் செய்த டிராவிட்.. ப்பா, மனுஷன் வேற லெவல்.. நெகிழ்ந்து போன ரசிகர்கள்..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், நேற்று பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில், 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்துள்ளது.
தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கே. எல். ராகுல், சதமடித்து அசத்தினார். 122 ரன்களுடன் அவுட் ஆகாமல் களத்தில் உள்ளார். மற்றொரு தொடக்க வீரரான மயங்க் அகர்வால், 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அதன் பிறகு, களமிறங்கிய புஜாரா, முதல் பந்திலேயே அவுட்டாகி, வந்த வேகத்தில் நடையைக் கட்டினார். இந்திய டெஸ்ட் அணி வரலாற்றில், மூன்றாவது வீரராக களமிறங்கி, அதிக முறை டக் அவுட் ஆனவர் என்ற மோசமான சாதனையையும் புஜாரா படைத்துள்ளார். இந்திய டெஸ்ட் அணியில் மட்டுமே இடம் பிடித்து வரும் புஜாரா, கடந்த 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு, மிகவும் சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறார்.
கடுமையான விமர்சனம்
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி, சமீபத்தில் நடந்து முடிந்த நியூசிலாந்து டெஸ்ட் தொடர் என எதிலும் பெரிதொரு தாக்கத்தை புஜாரா ஏற்படுத்தவில்லை. புஜாராவை வெளியே உட்கார வைத்து விட்டு, இந்திய அணியில் அடுத்த கட்ட இளம் வீரர்களான ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ் போன்றவர்களுக்கு வாய்ப்புகளை இனி கொடுக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ரசிகர்கள் ஏமாற்றம்
மேலும், தென்னாபிரிக்க அணிக்கு எதிரான நேற்றைய டெஸ்ட் போட்டிக்கு முன்பாகவும், இதே கோரிக்கையை ரசிகர்கள் முன் வைத்தனர். அது மட்டுமில்லாமல், அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்து அசத்திய ஷ்ரேயாஸ் ஐயரும் அணியில் இருந்தார். இதனால், அவர் தான் நேற்று அணியில் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், புஜாராவுக்கே மீண்டும் வாய்ப்பு கிடைத்தது.
சிக்கலில் புஜாரா
இதனிடையே, லுங்கி நிகிடி வீசிய இன்ஸ்விங் பந்தை எதிர்கொண்ட புஜாரா, பேட்டை வைக்க அதில் பட்ட பந்து, பீட்டர்சனிடம் கேட்சாக மாறியது. மீண்டும் ஏமாற்றிய புஜாராவை, நெட்டிசன்கள் நேற்று அதிகமாக கலாய்த்துத் தள்ளினர். அடுத்த போட்டியிலாவது, இந்திய அணி புஜாராவை வெளியே உட்கார வைக்க வேண்டும் எனவும் தெரிவித்து வருகின்றனர். அது மட்டுமில்லாமல், 33 வயதாகும் புஜாராவிற்கு இந்த டெஸ்ட் தொடர், மிகவும் முக்கியம் வாய்ந்ததாகும்.
நெகிழ வைத்த டிராவிட்
ஏனென்றால், இந்த தொடரிலும் அவர் ஜொலிக்காமல் போனால், நிச்சயம் அடுத்த டெஸ்ட தொடரில் இடம்பெறுவது மிகவும் கடினமே என்றும் பலர் கணித்து வருகின்றனர். அனைவரும் புஜாராவை விமர்சனம் செய்து கொண்டிருக்க, இந்தியாவின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், அவரிடம் செய்த செயல் ஒன்று நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.
பாராட்டும் ரசிகர்கள்
#SAvIND pic.twitter.com/SpMO6RtccL
— Ashwin Natarajan (@ash_natarajan) December 26, 2021
முதல் பந்தில் ஆட்டமிழந்த புஜாரா, இந்திய வீரர்கள் பும்ரா மற்றும் பிரியங்க் பாஞ்சால் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த டிராவிட், புஜாரா முதுகில் தட்டிக் கொடுக்க, அவரும் உடனடியாக சிரித்தார். புஜாராவின் ஆட்டத்தால், ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் கடுமையாக விமர்சனம் செய்து வரும் அதே வேளையில், டிராவிட்டின் இந்த செயல், பலரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
மற்ற செய்திகள்