BGM Shortfilms 2019

‘ராகுல் ட்ராவிட் மீதான புகார்’... ‘விளக்கம் அளித்துள்ள நிர்வாகக் கமிட்டி'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ராகுல் ட்ராவிட் மீதான இரட்டை பதவி ஆதாயம் பிரச்சினை குறித்து கிரிக்கெட் நிர்வாக கமிட்டியான சிஓஏ விளக்கம் அளித்துள்ளது.

‘ராகுல் ட்ராவிட் மீதான புகார்’... ‘விளக்கம் அளித்துள்ள நிர்வாகக் கமிட்டி'!

இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் ட்ராவிட், பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இதையடுத்து பிசிசிஐ-யின் நன்னடத்தை அதிகாரி டி.கே.ஜெயின், ராகுல் ட்ராவிட்டுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். ஏனெனில், ராகுல் ட்ராவிட் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நிர்வகிக்கும், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் துணைத் தலைவராக பதவி வகித்ததால், இந்த நியமனத்தில் இரட்டை பதவி ஆதாயம் முரண்பாடு இருப்பதாக கேள்வி எழுப்பியிருந்தது. இது பெரும் சர்ச்சையை கிளம்பியது.

அதன்பின்னர் இதுகுறித்து விளக்கம் அளிக்க கொடுக்கப்பட்ட 2 வார கால அவகாசத்தில், ட்ராவிட் நன்னடத்தை அதிகாரிக்கு பதில் அனுப்பி உள்ளார். இந்நிலையில் பிசிசிஐ-யின் நிர்வாக கமிட்டி கூட்டம் மும்பையில், கடந்த செவ்வாய்கிழமை நடந்தது. அதன்பின்னர் நிர்வாக கமிட்டி உறுப்பினர் ரவி தோஜ்டே அளித்தப் பேட்டியில், ‘ட்ராவிட் நியமனம் விஷயத்தில் இரட்டை பதவி ஆதாயம் பிரச்சினை எதுவும் இல்லை. அவரது நியமனத்துக்கு நிர்வாக கமிட்டி அனுமதி அளித்து விட்டது. நன்னடத்தை அதிகாரி இரட்டைப் பதவி ஆதாயப் பிரச்சினை இருப்பதாக கருதினால், அதற்கு நாங்கள் எங்கள் தரப்பு விளக்கத்தை அளிப்போம்’ என்றார்.

மேலும், ’தேசிய கிரிக்கெட் அகாடமி பணியில் ட்ராவிட் அமர்த்தப்பட்ட போது இந்திய சிமெண்ட்ஸ் பணியை விட வேண்டும் அல்லது விடுப்பில் வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதனையடுத்து சம்பளம் இல்லாத விடுப்புக்கு ட்ராவிட் இந்தியா சிமெண்ட்சிடம் கோரியுள்ளார். ஆகவே ஆதாயம் தரும் இரட்டைப் பதவி விவகாரம் இப்போது இல்லை’ என்று பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

CSK, BCCI, RAHULDRAVID, COA