கத்தார் உலகக்கோப்பை கால்பந்து தொடர்.. விஸ்வரூபம் எடுக்கும் தன்பாலின கலாச்சார விவகாரம்.. எல்லாத்துக்கும் காரணம் அந்த ஒரு சம்பவம் தானாம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகத்தாரில் இந்த மாதம் உலகக்கோப்பை கால்பந்து தொடர் துவங்க இருக்கிறது. இந்நிலையில் தன்பாலின கலாச்சாரம் குறித்த விவாகரம் அங்கே விஸ்வரூபமெடுத்துள்ளது.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட விளையாட்டு கால்பந்து. சாதாரண போட்டிகளுக்கே மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். அப்படியிருக்க உலகக்கோப்பை என்றால் சொல்லவா வேண்டும்? உலக மக்களின் பெரும் எதிர்பார்களுக்கு இடையே துவங்க இருக்கிறது இந்த ஆண்டுக்கான கால்பந்து உலகக்கோப்பை.
மத்திய கிழக்கு நாடான கத்தாரில் இந்த ஆண்டுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெற இருக்கிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவில் கால்பந்து உலகக்கோப்பை நடைபெற்ற நிலையில், தற்போது கத்தாரில் நடைபெற இருக்கிறது. இதற்கான பணிகள் கடந்த சில ஆண்டுகளாகவே துரிதகதியில் நடைபெற்று வந்தன. இந்நிலையில், தன்பாலின கலாச்சாரம் குறித்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
கத்தாரில் நடைபெற உள்ள உலகக்கோப்பை கால்பந்து தொடரின் தூதர் காலித் சல்மான் சமீபத்தில் ஜெர்மன் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் அளித்த பேட்டியில், “அவர்கள் எங்களது விதிகளை ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறோம். தன்பாலின ஈர்ப்பு என்பது ஹராம் (தடை). தன்பாலின ஈர்ப்பு ஏன் ஹராம் என்று கூறப்படுகிறது என்றால், அது மூளையை பாதிக்கிறது.” எனக் கூறியிருந்தார். இது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனால், தன்பாலின ஈர்ப்பு கொண்ட கால்பந்து ரசிகர்களுக்கு சிக்கல் ஏற்படலாம் என பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர். கடந்த வாரம் கடந்த வாரம் ஃபிஃபாவின் தலைவர் கியானி இன்ஃபான்டினோ வெளியிட்ட அறிக்கையில்,"உலகக் கோப்பையில் தோற்றம், பின்னணி, மதம், பாலினம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைவரும் கலந்துகொள்ள வரவேற்கப்படுகிறார்கள்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், கத்தார் உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கான பொறுப்பாளர்களில் ஒருவரான நசீர் அல் காதர் போட்டிகளை காண அனைவரும் வரலாம் எனவும் ஆனால் கத்தாரின் சட்ட திட்டங்களை அவர்கள் மதித்து நடந்துகொள்ள வேண்டுமென தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. வரும் 20 ஆம் தேதி, உலகக்கோப்பை தொடர் துவங்க இருக்கும் நிலையில் தன்பாலின கலாச்சாரம் குறித்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மற்ற செய்திகள்