"அன்னைக்கி நடந்தத நெனச்சு பூரா நாளும் 'அழுதுட்டு' இருந்தேன்... ரொம்ப மோசமான நாள் அது..." உடைந்து போன 'இளம்' வீரர்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பையின் இறுதி போட்டியில், உத்தரப்பிரதேசம் மற்றும் மும்பை அணிகள் நாளை மறுநாள் மோதவுள்ளன.
இந்த தொடரில், மும்பை அணியில் இடம்பெற்றிருந்த இந்திய இளம் வீரர் பிரித்வி ஷா, 7 போட்டிகளில் விளையாடி, 4 சதங்களுடன் 754 ரன்கள் எடுத்துள்ளார். இதில், மூன்று இன்னிங்ஸ்களில் 227, 185 மட்டும் 165 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார். முன்னதாக, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களில், 0 மற்றும் 4 ரன்களில் அவுட்டாகியிருந்தார்.
இவரது மோசமான பேட்டிங்கால், கடுமையாக விமர்சனத்தை பிரித்வி ஷா சந்தித்திருந்த நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் பிரித்வி ஷாவை அணியில் எடுக்கவில்லை. இந்நிலையில், ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டிக்கு பிறகு தான் எந்த நிலைமையில் இருந்தார் என்பது பற்றி தற்போது மனம் திறந்துள்ளார் பிரித்வி ஷா.
'முதல் டெஸ்ட் போட்டிக்கு பிறகு அணியில் இடம்பெறாமல் போனதும் நான் அதிகம் மனமுடைந்து போனேன். நான் எதற்கும் பயனற்றவன் என்ற உணர்வு எனக்குள் தோன்ற ஆரம்பித்தது. ஆனாலும், அணியினர் ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக ஆடியதால் மகிழ்ச்சியாக இருந்தேன். மறுபுறம், எனது வாழ்வில் மிக மோசமான நாளாகவும் அது இருந்தது.
நான் எனது அறைக்கு சென்று விட்டதும் அழுது, நொறுங்கி போனேன். என்னைச் சுற்றி ஏதோ தவறாக நடப்பதை உணர்ந்தேன். எனது வாழ்க்கையில் சில பதில்கள் உடனடியாக தேவைப்பட்டது. என்னிடமிருந்த தவறை பயிற்சியாளர்கள் ரவி சாஸ்திரி மற்றும் விக்ரம் ரத்தோர் ஆகியோர் எடுத்துரைத்தனர். நான் பேட்டை எடுத்து ஆடுவதில் சிறிய தவறு இருந்தது.
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் முடிந்து இந்தியா வந்ததும், சச்சினை சென்று சந்தித்தேன். என்னிடம் இருந்த பிழைகளைச் சுட்டிக்காட்டி தகுந்த அறிவுரை வழங்கினார். இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் தொடரில், நான் இடம்பெறாமல் போனதும் என்னுடைய தவறு தான்.
இனிமேல், இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தால், நிச்சயம் சிறப்பாக பங்காற்றுவேன். தோற்றாலும், திரும்ப திரும்ப முயற்சி செய்து கொண்டே இருப்பேன்' என நம்பிக்கையுடன் பிரித்வி ஷா தெரிவித்துள்ளார். அதற்கேற்ற படியான ஆட்டத்தையும் விஜய் ஹசாரே தொடரில் வெளிப்படுத்தி தன்னை நிரூபித்து காட்டியுள்ளார் பிரித்வி ஷா.
மற்ற செய்திகள்