"அந்த 'டைம்'ல எல்லாம் எனக்கே என் மேல கடுப்பா இருந்துச்சு.. அப்போ தான் 'அப்பா' என்கிட்ட ஒரு 'விஷயம்' சொன்னாரு.. மிரள வைத்த 'பிரித்வி ஷா'.. அவரே பகிர்ந்த 'சீக்ரெட்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

"அந்த 'டைம்'ல எல்லாம் எனக்கே என் மேல கடுப்பா இருந்துச்சு.. அப்போ தான் 'அப்பா' என்கிட்ட ஒரு 'விஷயம்' சொன்னாரு.. மிரள வைத்த 'பிரித்வி ஷா'.. அவரே பகிர்ந்த 'சீக்ரெட்'!!

இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணி, 17 ஆவது ஓவரிலேயே இலக்கை எட்டிப் பிடித்தது. இந்த போட்டியில், டெல்லி அணியின் இளம் வீரர் பிரித்வி ஷா (Prithvi Shaw), 41 பந்துகளில், 11 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 82 ரன்கள் எடுத்து அசத்தினார்.

அதிலும் குறிப்பாக, கொல்கத்தா வீரர் ஷிவம் மாவி (Shivam Mavi) வீசிய முதல் ஓவரிலேயே 6 பவுண்டரிகள் அடித்து பட்டையைக் கிளப்பியிருந்தார் பிரித்வி ஷா. ஐபிஎல் வரலாற்றில், ஒரே ஓவரில் 6 பவுண்டரிகளை அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பிரித்வி ஷா பெற்ற நிலையில், ஐபிஎல் தொடரில் முதல் ஓவரிலேயே 6 பவுண்டரிகள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் பிரித்வி ஷா படைத்தார்.

முன்னதாக, கடந்த ஆண்டு இறுதியில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் களமிறங்கிய பிரித்வி ஷா, அதிகம் சொதப்பியிருந்தார். இதனால், அடுத்த சில போட்டிகளில், அவரை இந்திய அணி களமிறக்கவில்லை. தொடர்ந்து, இங்கிலாந்து அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரிலும் பிரித்வி ஷா பெயர் இடம்பெறவில்லை.

இதனால், கடுமையாக நொந்து போயிருந்த பிரித்வி ஷா, விஜய் ஹசாரே தொடரில், மும்பை அணிக்காக களமிறங்கி, மொத்தமாக 827 ரன்கள் குவித்து சாதனை புரிந்திருந்தார். இதனைத் தொடர்ந்து, தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரிலும், டெல்லி அணிக்காக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில், ஆஸ்திரேலிய தொடரில் மோசமாக ஆடி, இந்தியா வந்த பிறகு, தனது தந்தை கூறிய முக்கிய அறிவுரை ஒன்றை, பிரித்வி ஷா நேற்றைய போட்டிக்குப் பிறகு பகிர்ந்துள்ளார்.

'ஆஸ்திரேலிய தொடர் முடிந்து, இந்தியா திரும்பிய சமயத்தில், எனது ஆட்டத்தை பற்றி நினைத்து, நான் அதிகம் மகிழ்ச்சி கொள்ளவில்லை. மொத்தமாக துவண்டு போயிருந்த சமயத்தில், எனது தந்தை என்னிடம் வந்து, "நீ உன்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்" என அறிவுறுத்தினார்.

அவரின் இந்த வார்த்தை தான், ஒரு இலக்கை குறிக்கோளாக வைத்து, அதனை நோக்கி என்னை கடினமாக உழைக்கச் செய்தது. கிரிக்கெட் போட்டிகளைப் பொறுத்தவரையில், ஒருவரின் பயணத்தில், அதிக ஏற்ற இறக்கங்கள் உண்டாகும்' என பிரித்வி ஷா கூறினார்.

தொடர்ந்து, ஷிவம் மாவியின் முதல் ஓவரில் 6 பவுண்டரிகள் அடித்தது பற்றிப் பேசிய பிரித்வி ஷா, 'நான் பேட்டிங் செய்து கொண்டிருக்கும் சமயத்தில் எப்போதும் எனது ரன்கள் என்ன என்பது பற்றி சிந்திக்க மாட்டேன். அணிக்காக ஆடி ரன் அடிக்க வேண்டும் என்பதில் மட்டும் தான் நான் குறிக்கோளாக இருப்பேன். சில, எளிய பந்துகளுக்காக தான் காத்திருந்தேன். ஷிவம் மாவியுடன், நான் 4 - 5 ஆண்டுகள் ஆடியுள்ளேன் என்பதால், அவர் எனக்கு எங்கே பந்து வீசுவார் என்பது தெரியும்' என பிரித்வி ஷா தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்