"இந்தியாவுக்கு ஒரு காலத்துல 'சேவாக்' எப்படியோ, அதே மாதிரி தான் இந்த பையனும்.." அவர போய் இவ்ளோ சீக்கிரம் 'ஓரம்' கட்டுறீங்களே?. "இது எல்லாம் நல்லா இல்ல!!"
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி, இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் மைதானத்தில், ஜூன் மாதம் 18 ஆம் தேதி ஆரம்பமாகவுள்ளது.
இந்த போட்டிக்கான இந்திய அணி, கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சில வீரர்கள் இந்திய அணியில் இடம்பெறாமல் போனதை, பல முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் நிபுணர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். அதிலும் குறிப்பாக, சமீப காலங்களில் நல்ல ஃபார்மில் இருந்த இளம் வீரர் பிரித்வி ஷாவை (Prithvi Shaw) இந்திய அணி தேர்வு செய்யவில்லை.
கடந்த ஆண்டு இறுதியில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை, இந்திய அணி கைப்பற்றி வரலாறு படைத்திருந்தது. இந்த தொடரின் முதல் போட்டியில் களமிறங்கிய பிரித்வி ஷா, இரண்டு இன்னிங்ஸ்களில் 0 மற்றும் 4 ரன்கள் அடித்திருந்தார். தொடர்ந்து, ஒரு போட்டியில் மோசமாக ஆடியதால், மீதமுள்ள போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து, இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் பிரித்வி ஷா இடம்பெறவில்லை. ஆனால், இதற்கிடையே நடைபெற்று வந்த விஜய் ஹசாரே தொடரில், மும்பை அணிக்காக ஆடிய பிரித்வி ஷா, 800 ரன்களுக்கு மேல் குவித்து சாதனை புரிந்திருந்தார். அதே போல, சமீபத்தில் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள ஐபிஎல் தொடரில், டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக ஆடிய பிரித்வி ஷா, மிகச் சிறப்பாக ஆடி ரன்கள் குவித்திருந்தார்.
இதனால், டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிரித்வி ஷா மீண்டும் தேர்வாகவில்லை. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் தேர்வுகுழு உறுப்பினர் சரண்தீப் சிங் (Sarandeep Singh) கூறுகையில், 'இந்திய அணிக்காக சேவாக் என்ன செய்தாரோ, அதனை செய்யக் கூடிய திறன் உள்ளவர் பிரித்வி ஷா. அவரது கிரிக்கெட் கெரியரின் தொடக்கத்திலேயே அவசரப்பட்டு அவரை ஓரங்கட்டியிருக்க கூடாது.
ஆஸ்திரேலிய தொடருக்கு பின்னர், அவர் கைவிடப்பட்ட போதும், உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடி, அதிக ரன்களைக் குவித்திருந்தார். தனது பேட்டிங்கில் இருந்த டெக்னிக் குறைகளை பிரித்வி ஷா தற்போது சரி செய்து கொண்டுள்ளார்.
ஐபிஎல் போட்டிகளில் அவர் எப்படி ஆடினார் என்பதையும் பாருங்கள். இங்கிலாந்து தொடரில் சொதப்பினாலும், சுப்மன் கில் போன்ற வீரரை இந்திய அணி மீண்டும் தேர்வு செய்தது. ஆனால், பிரித்வி ஷா போன்ற ஒரு திறமை வாய்ந்த இளம் வீரரை மட்டும் ஒதுக்கியுள்ளது' என சரண்தீப் சிங் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்