"MI'க்கு ரோஹித் கேப்டன் ஆகுறதுக்கு முன்னாடியே.." பல வருசத்துக்கு பிறகு தெரிய வந்த 'உண்மை'
முகப்பு > செய்திகள் > விளையாட்டு15 ஆவது ஐபிஎல் தொடர், கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதி ஆரம்பித்து, மிகவும் அசத்தலாக நடைபெற்று வருகிறது.
ஐபிஎல் அணிகளில் பலம் வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் அணி, இந்த ஐபிஎல் தொடரில், இதுவரை இரண்டு போட்டிகளில் ஆடி, இரண்டிலும் தோல்வியை சந்தித்துள்ளது.
முன்னதாக, ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை அணி, இதுவரை ஐந்து முறை ஐபிஎல் கோப்பையைத் தட்டிச் சென்றுள்ளது.
தடுமாறும் மும்பை அணி
அதிக முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றிய கேப்டன் என்ற பெருமை ரோஹித்திடமும், அதிக முறை கோப்பையைக் கைப்பற்றிய அணி என்ற பெருமை, மும்பையிடமும் உள்ளது. கடந்த ஆண்டு, ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாத மும்பை அணி, இந்த முறை தொடர்ந்து தோல்வி அடைந்து வருவது, அந்த அணியின் ரசிகர்கள் மத்தியில் சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஹைதராபாத் அணியில் அறிமுகம்
இருந்தாலும், இனிவரும் போட்டிகளில் வெற்றி பெற்று, நிச்சயம் மும்பை அணி அசத்தும் என்ற நம்பிக்கையும் உள்ளது. 2011 ஆம் ஆண்டு முதல், மும்பை அணிக்காக ஆடி வரும் ரோஹித் ஷர்மா, அதற்கு முன்பு வரை, ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக ஆடி இருந்தார். 2012 வரை, சச்சின் உள்ளிட்டோர் மும்பை அணியை வழிநடத்தியும் ஐபிஎல் கோப்பையை கைப்பற்ற முடியவில்லை.
ஆனால், ரோஹித் ஷர்மா கடந்த 2013 ஆம் ஆண்டு மும்பை அணிக்காக தலைமையேற்ற பின் அணியின் நிலையே மாறியது. இதனிடையே, டெக்கான் சார்ஜர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியில், ரோஹித் ஷர்மாவுடன் இணைந்து ஆடிய முன்னாள் வீரர் பிரக்யான் ஓஜா சூப்பரான தகவல் ஒன்றை தற்போது தெரிவித்துள்ளார்.
முன்பே கணித்த கில்கிறிஸ்ட்
"அப்போது ஒரு பேட்ஸ்மேனாக ரோஹித் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில், உள்ளூர் மும்பை அணி கூட அவரை ஒரு கேப்டனாக கருதவில்லை. இருந்த போதும், ஆடம் கில்கிறிஸ்ட், டெக்கான் சார்ஜர்சின் அடுத்த கேப்டனாக ரோஹித்தை நினைத்து வைத்திருந்தார்.
ஏனென்றால், நெருக்கடியான வேளைகளிலும், கொஞ்சம் கூட அஞ்சாமல், ரோஹித் சிறப்பாக பேட்டிங் செய்து வந்ததால் அவரிடம் கேப்டன்சி திறன்கள் இருப்பதாக கில்கிறிஸ்ட் கருதினார். ஒரு அணியை வழிநடத்துவது பற்றி, அவரிடம் இருந்து ஆலோசனைகள் வரும் போது, அவரால் கேப்டனாக இருக்க முடியும் என்றும் கில்கிறிஸ்ட் நம்பினார்.
மூன்றாவது சீசனுக்கு பிறகு, ஐபிஎல் ஏலம் நடக்கவில்லை என்றால், நிச்சயம் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு தான், முதல் முறை ரோஹித் கேப்டனாக இருந்திருப்பார். ஏனென்றால், அந்த சமயத்தில், கில்கிறிஸ்ட் கூட ஒருமுறை, ரோஹித் தற்போது கேப்டனாக ரெடி என தெரிவித்திருந்தார்" என பிரக்யான் ஓஜா கூறியுள்ளார்.
தாமதமாக கூட வாய்ப்பு..
2012 ஆம் ஆண்டு வரை, ஐபிஎல் தொடரில் பங்கு கொண்ட டெக்கான் சார்ஜர்ஸ் அணி, அதன் பிறகு கலைந்து, ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியாக மாறி இருந்தது குறிப்பிடத்தக்கது. ஒரு வேளை, டெக்கான் அணி தொடர்ந்து ஆடி இருந்தால், மும்பை அணிக்கு ரோஹித் வராமல் போகவோ, அல்லது சில ஆண்டுகள் தாமதமாக வரவோ கூட வாய்ப்பு இருந்திருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்