‘நெஞ்சுல பந்து பலமா அடிச்சிருக்கு.. கவனமா பார்த்துகோங்க’!.. அக்கறையுடன் ட்வீட் செய்த ‘பிரபல’ இயக்குநர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் போது தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு காயம் ஏற்பட்டது.
இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. இதில் 407 ரன்களை இந்தியாவுக்கு வெற்றி இலக்காக ஆஸ்திரேலியா நிர்ணயித்தது. இன்றைய போட்டியில் இந்தியா 334 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் டிரா என அறிவிக்கப்பட்டது. இதில் அதிகபட்சமாக ரிஷப் பந்த் 97 ரன்களும், புஜாரா 77 ரன்களும், ரோஹித் ஷர்மா 52 ரன்களும் எடுத்தனர்.
இப்போட்டியில் அஸ்வின் மற்றும் ஹனுமா விஹாரி ஆகிய இருவரின் ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ரிஷப் பந்த்-புஜாரா அவுட்டான பின் விஹாரி-அஸ்வின் இருவரும் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர். தோல்வியை தவிர்த்து ஆட்டத்தை டிரா செய்ய திட்டமிட்டு இந்திய அணி விளையாடியது.
அதனால் சிக்ஸர், பவுண்டரி என விளாசாமல் நிதானமாக விளையாட வேண்டும் என்பதில் அஸ்வின் மற்றும் விஹாரி ஆகிய இருவரும் உறுதியாக இருந்தனர். இதில் 100 பந்துகளை பிடித்து விஹாரி வெறும் 6 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய வீரர்களை சோதித்தார். இன்னொரு பக்கம் அஸ்வின் அவ்வப்போது பவுண்டரிகள் விளாசிக் கொண்டிருந்தார். அதிலும் லைன், ஹஸல்வுட் போன்ற வீரர்களின் பந்துகளை மிகவும் நேர்த்தியாக அஸ்வின் எதிர்கொண்டார்.
அஸ்வினை சுற்றி ஐந்து ஃபீல்டர்களை நிறுத்தியும் கூட ஆஸ்திரேலிய அணியால் அஸ்வினை சாய்க்க முடியவில்லை. ஒரு பக்கம் பவுலர்களின் பவுன்சர், யார்க்கரால் காயம், இன்னொரு பக்கம் விக்கெட் கீப்பரின் தொடர் ஸ்லெட்ஜிங் என அனைத்தையும் பொறுமையாக கையாண்ட அஸ்வின்-விஹாரி ஜோடி மிகவும் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இன்று (11.01.2021) இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட்டின் பிறந்தநாள். அவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக அஸ்வின் -விஹாரி ஜோடியின் ஆட்டம் இருந்ததாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
Bravo..
Truly!
Take care of the chest where that ball kicked into..
Respect!
— Gauthamvasudevmenon (@menongautham) January 11, 2021
இந்த நிலையில் திரைப்பட இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், அஸ்வினின் ஆட்டத்தை பாராட்டியும் அவரது காயம் குறித்தும் ட்வீட் செய்துள்ளார். அதில், ‘பிராவோ.. உண்மையிலேயே! பந்து அடித்த நெஞ்சை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள். மரியாதை!’ என அஸ்வின் மீது அக்கறையுடன் கௌதம் வாசுதேவ் மேனன் ட்வீட் செய்துள்ளார். இப்போட்டியில் அஸ்வினின் நெஞ்சு, வயிறு, தோள்பட்டை மற்றும் காலில் பந்து பலமாக அடித்து காயம் ஏற்பட்டது. இதனால் மைதனாத்தில் அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்